- by Editor
- 2 years ago
22ஆவது அரசமைப்புத் திருத்தம் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் - சஜித் பிரேமதாஸ
22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தைச் சீரழிப்பதற்கும், நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
22ஆவது அரசமைப்புத் திருத்தத்தைச் சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்த சஜித் பிரேமதாஸ, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
உலகளாவிய நடைமுறைகளை ஆராயும்போது, 22ஆவது அரசமைப்புத் திருத்தம் பல்வேறு வழிகளிலும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், இந்தத் திருத்தம் நீதித்துறைக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் இலக்குகளை அடைவதற்காக நாட்டில் ஒற்றைக் கட்சி ஆட்சியை நிறுவ முயற்சிப்பதாகவும், இளைஞர் கழகத் தேர்தல்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழு நியமனங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஜனநாயகத்தை முடக்கும் நோக்கில் செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகாரச் சமநிலையைப் பாதிக்கும் வகையில் 22ஆவது திருத்தம் அமைந்துள்ளதால், அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரம் நிறைவேற்றப்படாமல், கட்டாயமாக சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் தொழில் துறைகளின் வீழ்ச்சி, வேலையின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பாரிய பிரச்சினைகள் காணப்படும் நிலையில், அரசாங்கத்திடம் உள்ள ஒரே தேசிய வேலைத்திட்டம் நகைச்சுவையான தீர்வுகளை வழங்குவதாகவே அமைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
எனவே, அடிப்படை உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலான அரசமைப்புத் திருத்தமே தற்போதைய நிலையில் நாட்டுக்கு அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.