Tuesday, October 13, 2026

"என் பிள்ளை காய்கறி சாப்பிடவே மாட்டேங்குறான்" - இனி கவலை வேண்டாம், கருவிலேயே பழக்கலாம்


குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட பழக்குவது கர்ப்ப காலத்திலேயே தொடங்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சிறு குழந்தைகளுக்கு காய்கறிகளை உண்பது பல பெற்றோருக்கு சவாலாக இருக்கும் நிலையில், இந்த ஆய்வு புதிய பார்வையை வழங்குகிறது.

பிரித்தானியாவின் Durham University உள்ளிட்ட ஆராய்ச்சி குழு மேற்கொண்ட இந்த ஆய்வில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கேரட் மற்றும் கேல் (kale) காய்கறி சுவை கொண்ட பொடி அடங்கிய காப்ஸ்யூல்கள் வழங்கப்பட்டன.

அதன்பின் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் மூலம் கருவில் உள்ள குழந்தைகளின் முகபாவனைகள் கண்காணிக்கப்பட்டன. கேரட் சுவைக்கு வெளிப்பட்ட கருக்கள் சிரிப்பைப் போன்ற நேர்மறை எதிர்வினை காட்டியதாகவும், கேல் காய்கறி வாசனைக்கு வெளிப்பட்ட கருக்கள் முகத்தைச் சுளிக்கும் போன்ற எதிர்வினை காட்டியதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்த சோதனையின் தொடர்ச்சியாக, குழந்தைகள் பிறந்த மூன்று வாரங்களிலும், மூன்று வயது வரையிலும் கண்காணிக்கப்பட்டனர். கர்ப்ப காலத்தில் குறிப்பிட்ட உணவுகளுக்கு வெளிப்பட்ட குழந்தைகள், பின்னர் அதே உணவுகளுக்கு குறைவான எதிர்மறை எதிர்வினை காட்டியதாகவும் ஆய்வு கூறுகிறது.

Béatrice de Onis மற்றும் Natasha L. Rayland உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், தாயின் உணவுப் பழக்கம் குழந்தையின் எதிர்கால உணவு விருப்பங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, “Developmental Psychobiology” இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இதில் பங்களித்துள்ளனர்.

இருப்பினும், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் பிற நறுமணப் பொருட்கள் கருவின் வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை எனவும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

you may also like