- by Editor
- 2 years ago
‘சேரி மொழி’ என்றதற்கு மன்னிப்பு கேட்க மறுப்பு: நடிகை குஷ்பு வீட்டின் முன்பு இன்று போராட்டம்
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
"பெரும் தவறை செய்துவிட்டு மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்புவை கண்டித்து அவர் வீட்டின் முன்பு இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கொமிட்டியின் எஸ்.சி., எஸ்.டி., பிரிவின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்"
- இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கொமிட்டியின் பட்டியலினப் பிரிவுத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சிறந்த நடிகை என்பதை குஷ்பு தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வகையில் சேரி மொழி என்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். தமிழ்நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, ஒருநாள் முழுவதும் தேடிப் பிடித்து பிரெஞ்சு மொழியில் சேரி என்றால் அன்பு என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
குஷ்பு மனசாட்சி உள்ள நபராக இருந்தால், தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருப்பார். இந்தப் பிரச்சினையைத் தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகானே மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடித்து வைத்துவிட்டார். ஆனால், தொடர்ந்து சேரி என்ற வார்த்தை அர்த்தங்களைத் தேடும் வேலையில் குஷ்பு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். எதிர்ப்பு தாங்காமல் சென்னையை விட்டு ஓடிவிட்டு மீண்டும் திரும்பிய குஷ்பு, சேரிக்கு புது அர்த்தங்களை சொல்லியிருக்கிறார். வேளச்சேரி, செம்மஞ்சேரி என்றெல்லாம் பெயர் இருப்பதாக கூறி மீண்டும் சப்பைக்கட்டு கட்டும் வேலையைச் செய்திருக்கிறார்.
எனவே, பெரும் தவறை செய்துவிட்டு மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்புவை கண்டித்து அவர் வீட்டின் முன்பு திங்கள்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கொமிட்டியின் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.