Saturday, October 3, 2026

“இன, மொழி வேறுபாடின்றி சாதனைகளை அங்கீகரிக்க வேண்டும்” - மைத்ரி விவகாரத்தில் அர்ச்சுனா


தமிழ்-கனடிய நடிகை மைத்ரி ராமகிருஷ்ணனின் சர்வதேச சாதனைகள் குறித்து இலங்கையர்கள் பெருமை கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மைத்ரி ராமகிருஷ்ணனின் வெற்றியை இலங்கையர்கள் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், நடிகையின் இன மற்றும் கலாசாரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு சில சமூக ஊடகப் பயனர்கள் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் இனவாதக் கருத்துக்களுக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற இலங்கை வம்சாவளியினரின் சாதனைகளை இன வேறுபாடின்றி அங்கீகரிக்க வேண்டும் என்றும், தனிநபர்களை இலக்கு வைத்து இழிவான அல்லது இனவாத கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மைத்ரி ராமகிருஷ்ணன் நடித்துள்ள நெட்ஃபிக்ஸ் திரைப்படமான ‘பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’ தொடர்பாக இணையத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

திரைப்பட விளம்பர நடவடிக்கைகளின்போது தனது தமிழ் மற்றும் இலங்கை வேர்கள் குறித்து மைத்ரி ராமகிருஷ்ணன் பேசியதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் எழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சில சமூக ஊடகப் பக்கங்களில் திரைப்படத்திற்கு எதிர்மறையான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களை வழங்குமாறு அழைப்புகள் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகையை இலக்கு வைத்து இழிவான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் மிசிசாகாவில் இலங்கைத் தமிழ் பெற்றோருக்குப் பிறந்து வளர்ந்த மைத்ரி ராமகிருஷ்ணன், நெட்ஃபிக்ஸ் தொடரான ‘Never Have I Ever’ இல் தேவி விஸ்வகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானார்.

அவரது தமிழ் மற்றும் இலங்கை அடையாளம் தொடர்பான கருத்துக்களே அண்மைய சமூக ஊடக சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்ததாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவரது சர்வதேச கலைப் பயணத்தையும் சாதனைகளையும் இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் அணுக வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

you may also like