- by Editor
- 2 years ago
ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் - ட்ரம்ப்
-
- by Editor,
- 1 month ago
- in உலக செய்திகள்
ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்க இராணுவத்தின் “முழுமையான கட்டுப்பாட்டில்” இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே ட்ரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, ஈரானிய துறைமுகத்தை நோக்கிச் செல்ல முயன்ற பனாமா கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பலொன்றை அமெரிக்க இராணுவம் தாக்கியுள்ளது. அமெரிக்க எச்சரிக்கைகளைப் புறக்கணித்து ஈரான் மீதான கடற்படைத் தடையை மீற முயன்றதாகக் கூறப்படும் குறித்த கப்பலின் இயந்திரப் பகுதியை நோக்கி அமெரிக்க கடற்படையின் ஹெலிகொப்டர் இரண்டு ஹெல்ஃபயர் ஏவுகணைகளை ஏவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கப்பல் செயலிழக்கச் செய்யப்பட்டதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இடம்பெற்றுள்ளது. ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் தடுப்பு நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பிரச்சினையாகத் தொடர்கின்றன.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா தனது போர் நடவடிக்கைகளையும் தடைகளையும் நிறுத்த வேண்டும், வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ஹோர்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பில் அமெரிக்காவும் ஈரானும் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடுகளைத் தொடர்ந்தும் கொண்டுள்ளன. உலகளாவிய எரிபொருள் விநியோகத்துக்கு முக்கியமான இந்தக் கடல்வழியில் நீடிக்கும் பதற்றம் சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.