Saturday, October 10, 2026

ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் சம்மதமா? அமெரிக்காவுடன் இரகசியப் பேச்சுவார்த்தை அம்பலம்


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலையைத் தணிக்கும் நோக்கில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, போர்நிறுத்தக் காலப்பகுதியில் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பும் ஆலோசித்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஈரான் தனது கடற்படை கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பிலும் பேச்சுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்துவது மற்றும் ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கான தடைகளை ஓரளவு நீக்குவது குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

அதேவேளை, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்பதற்கும், அதன் அணு செறிவூட்டல் திட்டம் கட்டுப்படுத்தப்படும் என்பதற்குமான உறுதிமொழிகளைப் பெறுவதிலும் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை தளர்த்துவது மற்றும் முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகளை விடுவிப்பது குறித்து விவாதிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அமெரிக்கப் படைகள் அப்பகுதியில் மேலும் 60 நாட்கள் தங்கியிருக்கும் என்றும், இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னரே அவை திரும்பப் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது.

பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்க முடியும் என Axios செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தெஹ்ரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை கைவிட ஒப்புக்கொள்ளும் முன்மொழிவும் இந்த பேச்சுவார்த்தையில் அடங்கியுள்ளதாக The New York Times தகவல் வெளியிட்டுள்ளது.

you may also like