Friday, October 9, 2026

வேலை தேடிச் செல்பவர்கள் கவனம் - மோசடியாக இராணுவத்தில் சேர்க்கப்படும் வெளிநாட்டவர்கள்


ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ராணுவத்தில் ஏற்பட்டுள்ள மனிதவள பற்றாக்குறையை சமாளிப்பதற்காக வெளிநாட்டவர்களை அதிகளவில் ராணுவத்தில் இணைக்கும் நடவடிக்கையை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் ராணுவத்தில் இணையும் வெளிநாட்டவர்கள் மற்றும் நாடற்றவர்களுக்கு சுமார் 16 இலட்சம் ரூபாய் வரையிலான ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளும் பெரும் பொருளாதார இழப்புகளையும் மனிதவள இழப்புகளையும் எதிர்கொண்டு வருகின்றன.

உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கி வருவதால், போர் நீடித்து வருகிறது. இதனால், ரஷ்ய ராணுவத்தில் வீரர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல மாகாணங்களில் ஊக்கத்தொகை அதிகரிப்பு

இர்குட்ஸ்க் பிராந்தியம் மட்டுமன்றி, ரஷ்யாவின் பல்வேறு மாகாணங்களும் ராணுவத்தில் சேருபவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்மோலென்ஸ்க் மாகாணத்தில் ராணுவத்தில் இணைவோருக்கான ஊக்கத்தொகை 1.15 இலட்சம் ரூபிளில் இருந்து 10 இலட்சம் ரூபிளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ரியாசான் மாகாணத்திலும் இந்தத் தொகை 8.05 இலட்சம் ரூபிளாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை ரஷ்யா தனது ராணுவத்தில் அதிகளவில் இணைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, ரஷ்யாவில் வேலை அல்லது கல்விக்காகச் செல்லும் வெளிநாட்டவர்கள் சிலர் மோசடியான முறையில் ராணுவத்தில் சேர்க்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தீவிரமடையும் தாக்குதல்கள்

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டுவரும் இராஜதந்திர முயற்சிகள் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.

கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகக் கட்டமைப்புகள் மீது உக்ரைன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை கருத்திற்கொண்டு, ரஷ்ய எண்ணெய் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களுடன் இணைந்து ரஷ்யா–உக்ரைன் போரினால் உருவாகும் தாக்கங்களும் சர்வதேச எண்ணெய் சந்தையில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

you may also like