Sunday, October 11, 2026

வெள்ள நீர் வடிந்தோடாததால் சென்னையில் மக்கள் அவதி!


புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாணவர்கள் நலன் கருதி நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை 7 ஆம் திகதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடந்த சில நாட்களாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் நேற்று மாலை ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே 110 கிலோ மீற்றர் வேகத்தில் கரையைக் கடந்தது. சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை, வெள்ளம் ஓய்ந்தாலும் கூட சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி சென்னை வேளச்சேரியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தனியார் படகுகள் மூலம் மக்கள் வெளியேறி வருகின்றனர். குடிதண்ணீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மின்சாரம், தொலைத்தொடர்பு சேவை இன்னும் கிடைக்கவில்லை. ஒருசில பகுதிகளில் ஹெலிகொப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணி தற்போதுதான் தொடங்கியுள்ளது. இராணுவம் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே, சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில், தமிழகம், ஆந்திராவில் பலத்த சேதங்களை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் வலுவிழந்துவிட்டதாகவும், இருப்பினும் இன்று ஒரு சில மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபா வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, பிரதமரை நேரில் சந்தித்து வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல், அதிகனமழை காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. மழை காரணமாக, பல துணைமின் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதேபோல், புறநகர்பகுதிகளில் சில இடங்களில் மரகிளைகள் முறிந்து மின்சார கம்பிகள் மீது விழுந்துள்ளன. மின்வாரியம் தரப்பில் 15 ஆயிரம்பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மழைவிட்டதும் படிப்படியாக மின்விநியோகம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


you may also like