Friday, October 9, 2026

வெளிநாட்டுக் கடன் நிலவரம் குறித்து பிரதி அமைச்சர் விளக்கம்


அரசாங்கம் பெற்றுள்ள வெளிநாட்டுக் கடனின் அளவு அதிகரித்துள்ளதாக சில தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைத் தாம் வன்மையாக நிராகரிப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அதிகாரப்பூர்வ தரவுகளையும் ஆதாரமாகக் கொள்ளாமல் இவ்வாறான தகவல்கள் வெளியிடப்படுவது வருந்தத்தக்கது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட தரவுகளை மேற்கோள் காட்டி, அரசாங்கத்தின் கடன் 190 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த கடன் தொகை எவ்வாறு அதிகரித்தது என்பது தொடர்பில் அந்த அறிக்கைகளில் தெளிவான விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில தரவுகள் தவறானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கக் கடன் தொடர்பான அதிகாரப்பூர்வமான மற்றும் பொறுப்பான தகவல்கள் காலாண்டு அடிப்படையில் வெளியிடப்படும் ‘கடன் அறிக்கை’ (Debt Bulletin) ஊடாக வழங்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கைகளில் உள்நாட்டுக் கடன், வெளிநாட்டுக் கடன், கடன் வழங்கிய நாடுகள், பலதரப்பு மற்றும் இருதரப்பு கடன்கள் உள்ளிட்ட வர்த்தக வெளிநாட்டுக் கடன் தொடர்பான விரிவான தகவல்கள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அரசாங்கத்தின் கடன் தொடர்பான தகவல்களை வெளியிடும்போது அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதி அமைச்சர், அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் கடன் குறிப்பிடப்பட்ட அளவிற்கு அதிகரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

you may also like