- by Editor
- 8 months ago
வெற்றி பெற்றால் 1 டிரில்லியன் டொலர் நிதிப்பகிர்வு என டிரம்ப் வாக்குறுதி
-
- by Editor,
- 4 weeks ago
- in உலக செய்திகள்
அமெரிக்காவில் எதிர்வரும் 2026 நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரு அவைகளிலும் பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொண்டால், ஒவ்வொரு வயது வந்த அமெரிக்கக் குடிமகனுக்கும் 5,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வாக்குறுதியளித்துள்ளார்.
டல்லாஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், இந்தத் தொகையை “Trump Dividend” எனக் குறிப்பிட்டார்.
“குடியரசுக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், நீங்களும் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு 5,000 டொலர் கிடைக்கும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளாக உள்ள நிலையில், பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகும். இதனால் ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் இடைக்கட்டத்தில் இடைக்காலத் தேர்தல் நடைபெறுகிறது.
எதிர்வரும் இடைக்காலத் தேர்தலில் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் மூன்றில் ஒரு பங்கான 35 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்துடன், 39 மாநிலங்களுக்கான ஆளுநர்களையும் தெரிவு செய்வதற்கான தேர்தலும் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி காங்கிரஸின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழக்கும் பட்சத்தில், டிரம்ப் தனது எஞ்சிய இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில் புதிய சட்டங்களை நிறைவேற்றுவதிலும், அரசாங்கத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவதிலும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
இந்நிலையில், இடைக்காலத் தேர்தலில் தான் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றாலும், வாக்காளர்கள் தமது வாக்குகளை குடியரசுக் கட்சிக்கே வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் சுமார் 24.5 கோடி வயது வந்த குடிமக்கள் உள்ள நிலையில், ஒவ்வொருவருக்கும் 5,000 டொலர்கள் வழங்குவதற்கு சுமார் ஒரு டிரில்லியன் டொலர் நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை தனது நிர்வாகம் விதித்துள்ள இறக்குமதி வரிகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மூலம் சாத்தியப்படுத்த முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதல் அவசியம் எனவும், அமெரிக்காவின் தேசியக் கடன் 40 டிரில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ள நிலையில், இத்திட்டம் பொருளாதார ரீதியாக சாத்தியமற்றதாக இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, பணவீக்கம் மற்றும் ஈரானுடனான போர் உள்ளிட்ட காரணங்களால் டிரம்ப் நிர்வாகத்திற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதாகக் கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் டிரம்புக்கான ஆதரவு 30 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் 5,000 டொலர் அறிவிப்பை ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்துள்ளதுடன், இடைக்காலத் தேர்தலில் தோல்வியடையும் அச்சத்தில் முன்வைக்கப்பட்ட நம்பகத்தன்மையற்ற வாக்குறுதி எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தனது உரையின்போது ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்தும் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் நிலைக்கு மிக அருகில் சென்றிருந்ததால் இராணுவ நடவடிக்கை அவசியமானதாக இருந்தது என அவர் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினை இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர் முடிவுக்கு வந்து, கச்சா எண்ணெய் விலைகள் குறையும் என நம்பிக்கை தெரிவித்த டிரம்ப், ஹோர்முஸ் நீரிணைக்கு தனது பெயரை சூட்டப்போவதாகவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.