- by Editor
- 6 months ago
வெடிகுண்டு தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: மணிப்பூரின் பிஷ்ணுபூரில் ஊரடங்கு அமுல்
-
- by Editor,
- 5 months ago
- in இந்திய செய்திகள்
மணிப்பூரிலுள்ள மொய்ராங்கில் ரொக்கெட் தாக்குதல் எனச் சந்தேகிக்கப்படும் ஒரு சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததோடு, அவர்களின் தாயார் காயமடைந்தமை பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதனால், மணிப்பூர் அரசு 5 மாவட்டங்களில் 3 நாள்களுக்கு தொலைபேசி இணைய சேவையை முடக்கியுள்ளது. மேலும், பிஷ்ணுபூரில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் மலை மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ள, பதற்றம் நிறைந்த கிராமமான மொய்ராங்கின் 'த்ராங்லாபி அவாங் லெய்காய்' பகுதியில், நேற்று அதிகாலையில் ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் அல்லது மோட்டார் குண்டு தாக்குதலில், தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனும், 6 மாத பெண் குழந்தையும் உயிரிழந்தனர். அவர்களின் தாயார் காயமடைந்தார். இந்தச் சம்பவம் காரணமாக மணிப்பூரில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து மொய்ராங் மக்கள் ஒரு பெட்ரோல் நிலையத்துக்கு அருகே இரண்டு எண்ணெய் தாங்கிகளையும், ஒரு சரக்கு லொறியையும் தீயிட்டுக் கொளுத்தினர். மேலும், அங்குள்ள பொலிஸ் நிலையத்துக்கு வெளியே ரயர்களை எரித்ததோடு, தற்காலிகக் பொலிஸ் சோதனைச்சாவடி ஒன்றையும் சேதப்படுத்தினர். இதனால் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து இன்று வெளியிடப்பட்ட உள்துறைத் துறையின் உத்தரவின்படி, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய மாவட்டங்களில் தொலைபேசி இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.