- by Editor
- 8 months ago
'விவசாயத்துறையினை அபிவிருத்தி செய்யாமல் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது'
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது. எனவே அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் உட்பட கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் ஆரம்பிக்கும் அனைத்து வேலைத் திட்டங்களையும் வெற்றியடையச் செய்வதற்கு கிராமிய ரீதியாக செயற்படும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது."
- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2023 டிசம்பர் 2 ஆம் திகதி பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கிராம உத்தியோகஸ்தர்களுக்கான பரீட்சை முடிவுகளின்படி, பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற 2100 விண்ணப்பதாரர்களுக்கு கிராம உத்தியோகஸ்தர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
அடையாளமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
"வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டின் பொருளாதாரத்தை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். நாங்கள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதோடு அதிலுள்ள பல நிபந்தனைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போதைய அபிவிருத்தித் திட்டம் கிராமத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெற்றிகரமான அறுவடையைப் பெற முடிந்தது. மேலும், 2023 ஆம் ஆண்டின் பெரும் போகத்தில், மீண்டும் வெற்றிகரமான அறுவடையைப் பெற்றோம். இந்த பங்களிப்பின் காரணமாக இன்று நாம் பொருளாதார ரீதியில் வலுவடைந்துள்ளோம்.
இதன் மூலம் இன்று 2100 கிராம உத்தியோகத்தர்களை நியமனம் செய்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள முடிந்தது. நிர்வாகப் பணிகள் மட்டுமின்றி, கிராமப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் பொறுப்பும் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ” - என்றார்.