Saturday, October 3, 2026

விரிசலுக்குப் பின் முதல் உயர்மட்ட விஜயம்: சவூதி சென்ற ஷேக் மன்சூர்


ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஜனாதிபதி ஷேக் மன்சூர் பின் சையத் அல் நஹ்யான் நேற்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்து, சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் ஆகியோரை சந்தித்துள்ளார்.

கடந்த ஆண்டு இரு வளைகுடா நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஆழமான கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர், ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் சவூதி அரேபியாவுக்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும்.

சவூதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் பல வாரங்களாக சவூதி அரேபியாவை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், சவூதி அரேபியா அதிகரித்த அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள சூழலில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஹூதி கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச ஆதரவைத் திரட்ட சவூதி அரேபியா முயற்சித்து வரும் நிலையில், அந்தக் கோரிக்கை ஐக்கிய அரபு இராச்சியத்திடம் முன்வைக்கப்பட்டதா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

ஹூதிகளுக்கு எதிரான போரில் முன்னதாக ஐக்கிய அரபு இராச்சியம் சவூதி அரேபியாவின் முக்கிய பிராந்திய பங்காளியாக செயற்பட்டிருந்தது.

ஷேக் மன்சூர் பின் சையத் அல் நஹ்யானுக்கும் இளவரசர் காலித் பின் சல்மானுக்கும் இடையிலான சந்திப்பில், இரு தரப்பினருக்கும் பொதுவான ஆர்வமுள்ள விடயங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக சவூதி பாதுகாப்பு அமைச்சு தனது எக்ஸ் (X) தளப் பதிவில் தெரிவித்துள்ளது.

புவிசார் அரசியல் விவகாரங்கள் முதல் எண்ணெய் கொள்கை வரையிலான பல்வேறு விடயங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால கருத்து வேறுபாடுகள் கடந்த டிசம்பரில் பகிரங்கமாக வெளிப்பட்டன.

குறிப்பாக, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவைப் பெற்ற தெற்கு ஏமன் பிரிவினைவாதக் குழுவின் முன்னேற்றம் சவூதி எல்லைப் பகுதிகளுக்கு அருகில் சென்றதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசல் மேலும் வெளிப்படையானதாக மாறியமை குறிப்பிடத்தக்கது.

you may also like