- by Editor
- 11 months ago
வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து: 10 தமிழர் உட்பட 15 இந்தியர் மரணம்
வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தொலைபேசி நிறுவனம் தனது விநியோகஸ்தர்களை சிறப்பு சுற்றுலா அழைத்துச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் அன்ஜியாங் மாகாணத்தில் பூகுவோக் தீவு அமைந்துள்ளது. இந்தியாவில் இருந்து 32 சுற்றுலா பயணிகள் சில நாட்களுக்கு முன்பு இந்த தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அங்கிருந்து மே ரட் நகோய் என்ற தீவுக்கு அவர்கள் நேற்று படகில் சென்றனர். படகில் மாலுமி உட்பட 4 ஊழியர் இருந்தனர். பிற்பகல் 1 மணி அளவில் (இலங்கை நேரப்படி காலை 11.30) படகின் இன்ஜினில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அலைகளின் சீற்றமும் அதிகம் இருந்ததால் படகு தலைகுப்புற கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
இதைப் பார்த்து, அருகில் சென்ற சுற்றுலா படகுகளை சேர்ந்த மாலுமிகள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வியட்நாம் கடற்படை, கடலோரக் காவல் படை வீரர்களும் படகுகளில் விரைந்து சென்றனர். கடலில் தத்தளித்த 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 13 ஆண்கள்,2 பெண்கள் என இந்திய சுற்றுலாபயணிகள் 15 பேர் உயிரிழந்தனர். இதில் 10 பேர் தமிழர்கள். சென்னை அகரம் எஸ்ஆர்பி கோயில் தெற்கு தெருவைச் சேர்ந்த சந்தோஷ் குமார், கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பாபு, திருச்சி பீமநகர் யானைகட்டி மைதானத்தைச் சேர்ந்த சேர்ந்த ஷேக் அப்துல்லா(52), திருவானைக்காவல் அடுத்த கீழக்கொண்டயம்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி (வயது 45), கிராப்பட்டி அருணாசலம் நகரைச் சேர்ந்த அழகுராஜன் ( வயது 38), சேலம்
அழகாபுரம் ராமகிருஷ்ணா சாலையைச் சேர்ந்த ஸ்ரீதர் (வயது 62), தருமபுரி மாவட்டம் கடத்தூர் செந்தில்குமார் (வயது 45), திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த சிவகிரிப்பட்டி முருகபிரபு (வயது 43), வேலூர் சைதாப்பேட்டை கன்னிகா பரமேஸ்வரி கோயில் தெரு வினய்குமார், திருவண்ணாமலை ரவிசங்கர் ஆகிய 10 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்த நல்லபேட்டை ஆதிசேஷய்யா, கடப்பா ஸ்ரீதர், மசூலிப்பட்டினம் ஜெயலட்சுமி, கேரளாவைச் சேர்ந்த அவிகோட் செரியன், லவேனி ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த முருகபிரபுவின் நண்பரான பழநியைச் சேர்ந்த நிர்மல்குமாரும் (வயது 42) வியட்நாமுக்கு சென்றுள்ளார். இவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
‘‘மே ரட் நகோய் தீவை நெருங்குவதற்கு சுமார் 400 மீற்றர் தூரம் இருந்த நிலையில், படகு கவிழ்ந்துள்ளது. படகு விபத்து குறித்து உயர்நிலை விசாரணைக்கு வியட்நாம் அரசு உத்தரவிட்டுள்ளது’’ என்று வியட்நாம் கடலோரக் காவல் படையினர் கூறினர்.
உத்தர பிரதேசத்தின் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட லாவா மொபைல்ஸ் நிறுவனம், தனது விநியோகஸ்தர்களுக்காக சிறப்பு சுற்றுலாவை ஏற்பாடு செய்தது. இதன்படி அந்த நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் வியட்நாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதற்கு லாவா மொபைல்ஸ் கவலையும், வேதனையும் தெரிவித்துள்ளது.