Saturday, October 10, 2026

விம்பிள்டனில் மீண்டும் சம்பியனானார் அல்காரஸ்


விம்பிள்டன் 2024 டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை, நடப்புச் சம்பியனான ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸ் தக்கவைத்தக் கொண்டுள்ளார்.

 ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற இறுதிப்போட்டியில் சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சை எனும் 6-2 6-2 7-6 (7-4) எனும் நேர் செட்களில் அல்காரஸ் வென்றார்.

21 வயதான அல்காரஸ் கைப்பற்றிய இரண்டாவது விம்பிள்டன் சம்பியன் பட்டம் இது. கடந்த வருடமும் இறுதிப் போட்டியில் அவர் ஜோகோவிச் வெற்றிகொண்டு சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 37 வயதான ஜோகோவிச் 7 தடவைகள் விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை வென்றவர்.

2018 முதல் 2022 வரை தொடர்ச்சியாக 4 தடவைகள் விம்பிள்டன் பட்டத்தை அவர் வென்றார்.

 8 ஆவது தடவையாக விம்பிள்டனில் சம்பியனாகி, சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரின் சாதனையை சமப்படுத்துவதற்கு காத்திருந்த ஜோகோவிச்சின் முயற்சியை தொடர்ச்சியாக 2 இறுதிப் போட்டிகளில் அல்காரஸ் முறியடித்துள்ளார்.

இவ்வருட இறுதிப் போட்டியின் பின்னர் ஜோகோவிச் கருத்துத் தெரிவிக்கையில், அல்காரஸ் மிகச் சிறப்பாக விளையாடினார் எனவும், அவர் வெற்றிக்கு தகுதியானவர் எனவும் தெரிவித்தார்

2022 ஆம் ஆண்டு அமெரிக்கப் பகிரங்கத் தொடரில் சம்பியனாகியதன் மூலம், தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற கார்லோஸ் அல்காரெஸ், இவ்வருடம் பிரெஞ்சு பகிரங்கத் தொடரிலும் சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய முதல் 4 சந்தர்ப்பங்களிலும் சம்பியன் பட்டத்தை வென்ற இரண்டாவது வீரராக அல்காரஸ் விளங்குகிறார். இதற்குமுன் ரோஜர் பெடரர் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார். 

you may also like