- by Editor
- 7 months ago
வறுமையின் பிரபுக்கள் ஆகிவிட்ட சேவகர்கள்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
- வி.எஸ்.சிவகரன் -
மூடநம்பிக்கை அகன்று, விஞ்ஞானம் வீறு கொண்டு பெரு வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், நொடிக்கு நொடி உலகில் சகல துறைகளிலும் மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதனை ஏற்று, உணர்ந்து, இயைந்து, மிளிர்வதே வாழ்வியல் ஆகும். '
தூய்மையான சுற்றுச்சூழலும் ஆரோக்கியமான உணவும் மனிதனின் ஆயுளை தீர்மானிக்கும். ஆனால் தற்போது பணத்தால் ஏற்படும் நவீன மருத்துவமும் பெரும் பங்கு வகிக்கின்றது. விதிக்கோட்பாட்டிற்கு நவீன மருத்துவம் பெரும் சவாலாகவே காணப்படுகிறது.
உலகின் முதல் தர வணிகம் மருத்துவமே. உயிர் வாழ்வதற்காக எந்த எல்லைக்கும் மனிதர்கள் போவதுண்டு. அதனால் தான் கூலியைக் கணக்கிடுவதில்லை. ஆகவே அந்தத் துறையின் பெறுமானம் அதிகமாக உணரப்படுகிறது. உயிர் காப்பதனால்தான் அதனை ஆற்றுபவர்களைக் கடவுள் என மக்கள் விளித்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் பலர் அதற்கு தகுதியானவர்களா என்னும் கேள்வியும் உண்டு.
இயல்பாகவே இந்த நாட்டிலே ஊழலும், பக்கச்சார்பும், அரசியல் செல்வாக்கும், சர்வசாதாரணமானவை. சேவை எனத் தொடங்கப்பட்ட அவசிய தேவைகள் மூன்றும் தற்போது மாபியா வணிகம் ஆகிவிட்டன.
வைத்தியச் சேவை பணமில்லாவிட்டால் பிணம் எனும் நிலைக்கு வந்துவிட்டது. நீதிச்சேவை பணமில்லாமல் சிறை எனும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது. கல்விச்சேவை பணம் இல்லாவிட்டால் முட்டாள் எனும் நிலை ஏற்படுத்தப்பட்டுவிட்டது.
தற்போதைய படிப்பை அடுத்தவரை ஏமாற்றுவதற்கும் சாமானியனிடமிருந்து பணத்தைப் பறிப்பதற்கும் அவர்களை முட்டாளாக்குவதற்கும்தான் அதிகமானவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
'கற்றதனால் ஆய பயன் என்ன?
'அதிகாரமும் பணமும் அதிகரிக்க போக்கிலித்தனமும், அயோக்கியத்தனமும், ஆணவமும், அகங்காரமும், திமிரும், சுயநலமும், சந்தர்ப்பவாதமும், ஏமாற்றுவதும், புறக்கணிப்பதும் கூடவே குடிகொண்டு விடுகின்றன.
இதில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், மாலை நேரக் கல்வி வணிகர்கள் முதன்மையானவர்களாகத் திகழ்கிறார்கள்.
'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்று ஒரு முதுமொழி உண்டு. வாழ்க்கைக்குப் பணம் தேவை. ஆனால் பணமே வாழ்வாகிறது. இவர்கள் பலர் மனித தன்மையை இழந்து விடுகிறார்கள்.
இலங்கையிலே ஊழல் இல்லாத திணைக்களங்கள் உண்டா? நீதிமன்றங்களில் அதிகம் நிலுவையில் உள்ளவை காணி வழக்குகளே. இவற்றில் அதிக பிணக்குகள் சட்டத்தரணிகளால் ஏற்படுத்தப்பட்டவை. அதை இந்த நாட்டின் 'சிஸ்டமும்' தடுக்கத் தவறியேயுள்ளது. தவறாக எழுதிய உறுதிகளும், முறையற்ற உரிமை மாற்றங்களும் இதற்குக் காரணம். குற்றத்தைச் செய்ய வழிவகுத்தவர்களை எந்தச் சட்டமும் தண்டிப்பதில்லை. பாவம், ஏழைகள் மட்டுமே நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். '
சட்டம் அனைவருக்கும் சமம் என்பது உலகில் மிகப்பெரிய பொய். 'சட்டம் சிலந்தி வலை போன்றது. புழு, பூச்சிகள் மட்டுமே சிக்கிக் கொள்கின்றன. பெரிய மிருகங்கள் கிழித்து விட்டு தப்பியோடி விடுகின்றன' என்கிறார் ஓசோ.
இவர்களுக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் கூட்டு எதிர்ப்புணர்வு உண்டு. விரைவில் அது வெகுசன எழுச்சியாக மாறுவதற்குரிய வாய்ப்பு இல்லாமல் இல்லை.
சாவகச்சேரி மருத்துவர் கூறியது ஒன்றும் புதிய விடயம் அல்ல. முகநூல் போராளிகளுக்கு வேண்டுமானால் அவருடைய தகவல் புதிதாக இருக்கலாம் அல்லது அவர் ஒரு ஹீரோவாக தெரியலாம். அவரும் இந்த மருத்துவமாபியா துறையில் ஓர் அங்கமே. இலங்கையின் மருத்துவத் துறையை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. மருத்துவர் சங்கம் வானளாவிய அதிகாரம் படைத்தது. சுகாதார அமைச்சருக்கோ, செயலாளருக்கோ இல்லாத அதிகாரம் அவர்களுக்குத்தான் உண்டு. தொழிற்சங்கம் எனக்கூறி யாவரையும் ஏமாற்றி வைத்துள்ளனர். இவர்கள் நினைத்ததையே செய்கிறார்கள். இடமாற்றம் உட்பட்ட அனைத்து சலுகைகளையும் அவர்களே தீர்மானித்து விடுகிறார்கள். பெயரளவிற்கு சுகாதார அமைச்சும், அதிகாரிகளும் காணப்படுகின்றனர். நாட்டில் அதிகமான மருத்துவ நிபுணர்கள் சில மாவட்டங்களில் வாரத்தில் மூன்று நாள்களே வேலை செய்கிறார்கள் - அரச வைத்தியசாலைகளில். மீதி நாள்கள் தனியார் வைத்திய சாலையில்தான். அதுவும் மக்கள் தொகை குறைந்த மாவட்டங்களுக்கு நிரந்தரமாக இவர்கள் வருவதில்லை. காரணம் அந்த மாவட்டங்களில் பெரிய அளவில் தனியார் வைத்தியசாலைகள் இல்லை என்பதால் சாதாரண மருத்துவர்கள் கூட எட்டு மணி நேரம் வேலை செய்வது இல்லை.
ஆனால் மாதாந்தம் 120 மணி நேரம் மேலதிக கொடுப்பனவை யாவரும் கட்டாயமாக பெறுகிறார்கள். வேலைக்கு போகாத நாம்களில் கூட ஊதியமும், மேலதிகநேர கொடுப்பனவும் ஒவ்வொரு வைத்தியரின் தரத்துக்கு ஏற்ற வகையிலே மணித்தியாலம் ஒன்றிற்கு ஆகக் கூடிய தொகை 750 ரூபாவரை பெறுகிறார்கள். ஒரு வைத்தியர் 90 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மேலதிகநேர ஊதியத்தைப் பெறுகிறார்கள். இந்த கொடுப்பனவு வழங்காவிட்டால் மருத்துவ நிர்வாகிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக மாகாண மூத்த நிர்வாக வைத்திய அதிகாரி தெரிவித்தார். அண்மையில் ஒரு வைத்தியர் தனது தனிப்பட்ட விடயத்திற்கு நீதிமன்றத்திற்கு போன நாளிற்கு கூட மேலதிகக் கொடுப்பனவு பெற்றதால் விசாரணைக்கு உட்பட்ட சம்பவங்களும் உண்டு. இதைவிட தனியார் வைத்தியசாலைகளில் சிலர் மாதாந்தம் பல மில்லியன் ரூபா அளவுக்கு வருமானம் பெறுகிறார்கள்.
ஏழையின் இரத்தத்தை உறிஞ்சும் ஆண்டான், அடிமை, முதலாளித்துவத்திற்கும், மனச்சாட்சியற்ற மீட்டர் வட்டிகாரனுக்கும், சமூகத்தை வறுமையில் வைத்திருக்கத் திட்டமிடும் நிதி நிறுவனங்களுக்கும், வகை தொகை இன்றி வசூலிக்கும் மாலை நேர ஆசிரியர்களுக்கும், yes sir, no sir எனக் கூறி ஏழைகளிடம் பணம் பறித்து, ஏமாற்றி, நீதிக்கு சாவு மணி அடிக்கும் சட்டத்தரணிகளுக்கும் என்ன வித்தியாசம்? இவர்கள் உண்மையில் வறுமையின் பிரபுக்களே. சமூகம் ஏழையாக இருந்தால்தான் இவர்கள் இராஜ வாழ்க்கையைப் பிரபுக்களைப் போல் வாழ முடியும். அறம் இல்லாத பண வசூலிப்புகள், மனசாட்சி - மனிதநேயம் இல்லாமல் ஏக இராஜ்ஜியம் நடத்துகிறார்கள். இவர்களைக் கேள்வி கேட்பது யார்? இவர்களுக்குத் தண்டனை கொடுப்பது யார்? சட்டமா?அல்லது அறமா? இதனால்தான் பாட்டாளி வர்க்கம் தொடர்ந்து சுரண்டுதலுக்கு உள்ளாக்கப்படுகிறது. இதற்கு எதிராகவே கம்யூனிசம் எத்தனை புரட்சியை ஏற்படுத்தியது. ஆயினும் அதனை மீறி,முதலாளித்துவம் நவீன வடிவில் வீறு கொண்டெழுகிறது.
உயிர் காக்கும் வைத்தியத்துறை முழுமையாக முறைமை மாற்றம் (சிஸ்டம்) செய்யப்பட வேண்டும். இல்லையேல் வியட்நாமை போல் வைத்தியர்களை அதிகரிக்க வேண்டும். வியர்க்க உழைக்காத பணம் எப்படி இவர்களுக்கு நிலைக்கப் போகிறது? வட்டிக்காரன் பணம் வைத்தியனுக்கு என்பார்கள். வைத்தியன் பணம் எவருக்கோ.....? இலவசக் கல்வியிலே படித்தவர்கள் என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இவர்கள் பணத்துக்குப் பணிபுரிகிறார்கள். எத்தனை பேர் சேவை செய்கிறார்கள்? மாபியாக்கள் என்பதை விட பலர் பணப்பிசாசுகளாகவே அலைகிறார்கள். சில நல்லவர்களும் உண்டு. அதில் சிலர் தனியார் வைத்தியசாலை பக்கமே போகாதவர்களும் உண்டு.
மூன்று நிமிட சத்திர சிகிச்சைக்கு என்னிடம் 88ஆயிரத்து 500ரூபாய் அறவிட்டது யாழில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை. அதில் 68 ஆயிரம் ரூபா வைத்தியருக்கு, பன்னிராயிரம் ரூபா உதவி வைத்தியருக்கும், மீதி வைத்தியசாலைக்கும் மருந்துக்கும். இந்த மூன்று நிமிட சத்திரசிகிச்சைக்கு இடையில் வைத்தியருக்கு தொலைபேசி அழைப்பு. இடையிலே நிறுத்திவிட்டு அவர் ஆசுவாசமாக பேசுகிறார். எவ்வளவு பொறுப்பற்ற செயல்பாடாக உள்ளது? அவர் மிகப் பிரபலமான வைத்திய நிபுணர். ஆனால் அந்தச் சத்திரசிகிச்சை எனக்கோ முழுமையாக பயனளிக்கவில்லை. மீள வினவிய போது சாட்டுப் போக்கு கதையை கூறினார். இவர் மிக ஏழைக் குடும்பத்தில் இருந்து வைத்தியர் ஆகியவர். கடந்து வந்த பாதையைக் கூட நினைக்க மறந்த மனிதர்கள். இப்படி எத்தனை பேரை ஏமாற்றுகிறார்கள்.
வட்டிக்காரனுக்கும் நிதி நிறுவனத்திற்கும் எப்படி புறம்பாடி பணம் கட்டுகிறார்களோ அப்படித்தான் இந்த தனியார் வைத்தியசாலைகளும் ஏழைகள் புழுதி வாரி தூற்றுகிறார்கள். அதை அவர்கள் புரிந்து கொள்வதாக தெரியவில்லை. 'ஒருவருக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்து விடு' என்றார் மகாகவி பாரதியார். இன்று பாரதி இருந்திருந்தால் இந்த வைத்தியர்களுக்கு என்ன சொல்லி இருப்பாரோ....
சாவகச்சேரிப் போராட்டம் என்பது தானாகச் சேர்ந்த கூட்டம். அந்த வைத்தியருக்கு ஆதரவு என்பதை விட மருத்துவத்துறையின் சீர்கேடுகள் மீது மக்களுக்கு இருந்த கூட்டுக்கோபத்தின் வெளிப்பாடு. அதை அந்த வைத்தியர் உள்ளே இருந்து கேள்விக்கு உட்படுத்தினார் என்பதனாலே ஆதரவுப் போராட்டம் வெகுசன தளத்தில் உருவாகியது. அவர் எழுப்பிய கேள்விகள் சரியா, தவறா தெரியவில்லை. அல்லது அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை அவரால் இதுவரை முன்வைக்கப்படவில்லை. எழுமாறாக கூறுவதில் எந்த பயனும் இல்லை. இலங்கை மருத்துவத்துறையில் நீதி கிடைக்கும் என்று அவர் நம்புவது நகைப்புக்கிடமானது.
அரசு ஊழியர்கள் ஊடகங்களில் பேசுவதற்கு வரையறையும் அனுமதியும் தேவை. இவரது நேரலை நிகழ்ச்சியை நடத்திய ஊடகமும் சமூகப் பொறுப்பற்று நடந்து கொண்டது. ஓர் அரச ஊழியர் அரசியல் வாதிகள் போல் பேச முடியாது. இவரது கருத்துக்கள் இவருக்கு எதிராக மாறலாம். இவர் தனது ஜனநாயகப் போராட்டத்தை நிதானமாக, ஒழுங்கு முறையில் நகர்த்தவேண்டும். முகநூல் நேரலையால் எந்த பயனும் ஏற்படாது.அவரது குற்றச்சாட்டுக்களுக்கு விரைவில் ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் எழுமாறாக கூறுவது நமது சமூகத்தில் இயல்பானதே. மூன்று வாரம்தான் இவர் பொறுப்பேற்று. அதற்குள் எதையும் மாற்றிட முடியுமா? அதை அவர் வேறு விதமாக கையாண்டிருக்கலாம். பலவருடப் பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வுகாண முடியாது. அண்மைக்காலத்தில் வடக்கில் நடந்த பாரிய வைத்தியத் தவறுகளுக்கு கூட எந்த நியாயமும் இதுவரைக் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் அதிகாரிகள் மன்னிப்புக் கூடக் கோரவில்லை. தினமும் நடைபெறும் வைத்தியத் தவறுகளுக்கு எவரும் பொறுப்பேற்பதாகக் கூட இல்லை. வைத்தியத்துறையிலே சாதாரண சிற்றூழியர் தொடக்கம் தாதிகள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வரை பலர் தங்களை அதிமேதாவிகளாகவும் நோயாளிகளை அடி
மைகளாகவும் நடத்துகின்ற - நடத்தியிருக்கின்ற - நடாத்தி வருகின்ற - பல சந்தர்ப்பங்கள் உண்டு.
இதில் இவர்களின் மனங்களிலே மாற்றம் ஏற்பட வேண்டும். இது மனிதாபிமானத் துறை என இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வுணர்வு ஏற்படாத வரைக்கும் சட்டங்களாலோ திட்டங்களாலோ எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
வைத்தியர்கள் நோயாளியின் நலன்காப்பாளர்கள் என்கின்ற நிலையை பலர் உணர்வதில்லை. அவர்களில் பலர் சாதாரண ஓர் அரசு ஊழியர் போல் கடமைக்காக நடந்து கொள்வதனால்தான் மக்களின் கூட்டுக் கோபத்தின் விளைவு விபரீதமாக மேலெழுந்தது.
ஆகவே சாவகச்சேரி வைத்தியரின் குற்றச்சாட்டு குற்றச்சாட்டாகவே போகக்கூடிய வாய்ப்பு உண்டு. புத்தரிடம் ஒரு தாய் கேட்டாராம் தனது இறந்த பிள்ளையின் உயிரை மீட்டுத் தருமாறு. சாவே நிகழாத இடத்தில் சாம்பல் எடுத்து வா என்றாராம் புத்தர். சாவகச்சேரி வைத்தியர் நிலையும் இப்படித்தான் முடியும். ஊழல் இல்லாத திணைக்களங்கள் இலங்கையில் உண்டா?