Wednesday, October 7, 2026

வரியை அதிகரிப்பதே அரச வருமானத்தை அதிகரிக்க மாற்று வழி: ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு


பெறுமதி சேர் வரியை (வற்) அதிகரிப்பதே அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான மாற்று வழி என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தவறான பொருளாதார தீர்மானங்களை எடுப்பதன் மூலம் ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் சிலர் கூறுவது போன்று பிரபலமான தீர்மானங்களை மேற்கொண்டு நாட்டின் எதிர்காலத்தை இருளடையச் செய்ய தாம் தயாரில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் நேற்று இடம்பெற்ற “ஷில்ப அபிமானி 2023” எனும் கைவினைப் பொருட்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியின் ஊடாக 12 வீத வருமானம் பெறப்பட வேண்டும் எனவும் இதனை 15 வீத இலக்குடன் நிறைவு செய்ய வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மொத்த தேசிய உற்பத்தியில் 15 வீத வருமானத்தைப் பெற முடிந்தால், பொருளாதார ரீதியாக முன்னேறும் பலம் உள்ளதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பணத்தை அச்சடிக்க முடியாமலும், வங்கிகளில் கடன் பெற முடியாமலும் இருப்பதால், அரச வருமானத்தை அதிகரிப்பதே ஒரே வழி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே வற் வரி அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டதாகவும், அதன்படி, வற் வரி 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக உயர்த்தப்பட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வற் வரி விலக்களிக்கப்பட்ட பல பொருள்கள் வற் வரியின் கீழ் கொண்டுவரப்பட்டதன் மூலம் தற்போது தேவையான வருமானம் கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் இல்லாத, உரம் இல்லாத, வீழ்ச்சியடைந்த பொருளாதார யுகத்திற்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்ல முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


you may also like