Sunday, October 4, 2026

வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு? சிசிடிவி கேமராவில் சிக்காத 35 மில்லியன் கொள்ளை


ஹொரனை அரச வங்கி ஒன்றில் இருந்து ரூ. 35,000,000 பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த (03) பிற்பகல் 2.50 மணிக்கும் 2.55 மணிக்கும் இடையில் இந்தக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் அல்லது ஊழியர் குழு இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விரிவான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

தகவலின்படி, இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உதவி மேலாளர் பணப் பைகளை இரண்டு சேவை மையங்களுக்கு எடுத்துச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், வங்கி வளாகத்திற்குள் இருந்து நடந்து வந்த ஒருவர் பணப் பைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

சம்பவத்துக்குப் பிறகு மேலாளர் மற்றும் ஊழியர்கள் வங்கி வளாகம் முழுவதும் தேடியபோதும் சந்தேகநபர் எவரும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து 119 அவசர அழைப்பு மையத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அரச வங்கி சின்னம் கொண்ட இரண்டு வெளிர் கிரீம் நிற பணப்பைகளில் இருந்த 5,000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய மொத்தம் ரூ. 35,000,000 காணாமல் போனது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கி உள்ளே உள்ள சில பகுதிகளில் சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருந்தாலும், பணம் எடுத்த இடமும் வெளியேறும் வாயிலும் கேமராக்கள் இல்லாததால் சந்தேகநபரின் முழு நடமாட்டமும் பதிவு செய்யப்படவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விசாரணை மேலும் சிக்கலான நிலையை எட்டியுள்ளது.

சம்பவம் தொடர்பாக உதவி மேலாளரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டபோதிலும் இதுவரை முக்கியமான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.


you may also like