Friday, October 9, 2026

ராகுல் மீது வழக்கு!


இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெண் பொலிஸை , ராகுல் காந்தி தவறான முறையில் தொட்டு தள்ளிவிட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டில்லி பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை முதல் டில்லியில் காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இராஜினாமா செய்ய வலியுறுத்தியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராகவும் நடக்கும் இப்போராட்டத்துக்கு ராகுல் காந்தி தலைமை ஏற்றுள்ளார்.

இந்த நிலையில், டில்லியில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொலிஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் ராகுல் காந்தி பெண் பொலிஸ் ஒருவரை தவறான முறையில் தொட்டுத் தள்ளிவிட்டார் எனவும் பிரியங்கா காந்தி அந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை முழங்கையால் தாக்கினார் என்றும் குற்றஞ்சாட்டி பா.ஜ.க. காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜந்தர் மந்தர் அருகே காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பொலிஸுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த காணொலி வைரலானதைத் தொடர்ந்து, டில்லி பொலிஸ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.

இந்த காணொலியில் , காங்கிரஸ் தலைவர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்படும்போது அவர்களுடன் மோதுவதைக் காட்டும் பல காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.


you may also like