Wednesday, October 7, 2026

ரயில்வே சமிக்ஞை கோளாறுகள் நீடித்தால் தொழிற்சங்க நடவடிக்கை


ரயில்வே திணைக்களத்தில் நீடித்து வரும் சமிக்ஞை மற்றும் கடமை தொடர்பான பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு வழங்கத் தவறினால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனைத் தெரிவிக்கையில், கடுமையான சமிக்ஞை கோளாறுகள் நீடித்தபோதிலும் தலைமன்னார் ரயில் பாதையில் கடந்த வாரம் முதல் ரயில் சேவைகள் பாதுகாப்பற்ற முறையில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

அவரது கருத்துப்படி, தலைமன்னார் பாதையில் இதுவரை சமிக்ஞை அமைப்புகள் முழுமையாகச் செயற்படுத்தப்படாத நிலையில், மதவாச்சி முதல் தலைமன்னார் துறைமுகம் வரையிலான ஒற்றைப் பாதையில் ரயில்கள் தொடர்ந்து 'பைலட் முறை' (Pilot Method) மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.

சாதாரணமாக சமிக்ஞை கோளாறு போன்ற அவசர மற்றும் விசேட சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய இந்த பைலட் முறை, தற்போது நிரந்தர இயக்க முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், மஹவ – அநுராதபுரம் ரயில் பிரிவிலும் சமிக்ஞை தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், அங்கும் தற்காலிக சமிக்ஞை முறைகளின் கீழ் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கோடிக்கணக்கான மக்கள் பணத்தைச் செலவழித்து புனரமைக்கப்பட்ட ரயில் பாதைகள் மற்றும் சமிக்ஞை அமைப்புகள் உரிய பராமரிப்பின்றி பாழடையும் அபாய நிலையை எட்டியுள்ளதாகவும் சுமேத சோமரத்ன கவலை வெளியிட்டார்.

ரயில் நிலையங்களில் காணப்படும் சமிக்ஞை கோளாறுகள் மற்றும் பணிசார் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் விரைவாகவும் நிரந்தரமாகவும் தீர்வு வழங்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது தவிர வேறு வழியில்லை என்றும், இதுகுறித்து அதிகாரிகளுக்கு ஏற்கனவே எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

you may also like