Thursday, October 8, 2026

மிக்ஸர் தின்பண்டத்தில் இருந்த வேர்க்கடலை தொண்டையில் சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு


இந்தியாவின் கேரள மாநிலம், மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில் மிக்ஸர் தின்பண்டம் சாப்பிடும் போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குன்னும்புறம் பகுதியைச் சேர்ந்த தம்பதியரின் 3 வயது மகன் வீட்டில் வைத்து மிக்ஸர் தின்பண்டத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அதில் இருந்த வேர்க்கடலை எதிர்பாராத விதமாக சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளது.

இதன் காரணமாக சிறுவனுக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன், தொண்டையில் சிக்கியிருந்த வேர்க்கடலையை அகற்ற பெற்றோர் முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மூச்சுவிட முடியாமல் திணறிய சிறுவனை பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may also like