Friday, October 9, 2026

மலையகத்தில் சித்த மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த கோரிக்கை


மலையகப் பகுதிகளில் சித்த மருத்துவ சேவைகளை விரிவுபடுத்தவும், சித்த மருத்துவ பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கவும் கோரி பல்வேறு பரிந்துரைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் இணைப்பாளர் வர்ணகுலசிங்கம் பிரவீன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரிடம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் குறித்த மகஜரை கையளித்தார்.

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வரும் நிலையில், அதற்கான விழிப்புணர்வு மற்றும் சேவை விரிவாக்கம் நாட்டில் போதுமான அளவில் இல்லாததால் மாணவர்களும் பட்டதாரிகளும் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூர் மருத்துவ மூலிகை வளங்களை பயன்படுத்தி சித்த மருந்து உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் என்பதுடன், நாட்டில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை மற்றும் மருந்து இறக்குமதி செலவினங்களையும் குறைக்க முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நுவரெலியா, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த சித்த மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு தங்களது சொந்த பிரதேசங்களிலேயே சேவையாற்றும் வாய்ப்புகளை வழங்கவும், மலையகப் பகுதிகளில் சித்த மருத்துவ வசதிகளை விரிவுபடுத்தவும் கோரப்பட்டுள்ளது.

அதேவேளை, மலைநாட்டில் இயற்கையாக வளரும் மருத்துவ மூலிகைகளை அடிப்படையாகக் கொண்ட மருந்து உற்பத்தி நிலையங்களை நிறுவுதல் மற்றும் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் சித்த மருத்துவ அடிப்படையிலான தொற்றாநோய் சிகிச்சைப் பிரிவுகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் மலையக மக்களுக்கு பாரம்பரிய மருத்துவ சேவைகளை எளிதில் பெற்றுக்கொள்வதற்கும், சித்த மருத்துவத் துறையில் கல்வி கற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும் என அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

you may also like