Friday, October 9, 2026

மத்திய கிழக்கு மோதலில் அமெரிக்காவுக்கு ஐ.அ.அமீரகம் உதவியதாக ஈரான் குற்றச்சாட்டு


மத்திய கிழக்கில் இடம்பெறும் போர்ச் சூழலில் தங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உதவியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லியில் இரண்டாவது நாளாக நடைபெற்ற பிரிக்ஸ் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஈரான் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் துணைச் செயலாளர் கதிர் நெசாமிபூர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு முகமைகள் தலைவர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்ற 16வது கூட்டத்தில் பேசிய அவர், ஹோர்மூஸ் நீரிணை தொடர்பான பதற்றங்களுக்கும் அதனைச் சார்ந்த மோதல்களுக்கும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் காரணம் என தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தளங்களை பயன்படுத்தி அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், குறிப்பாக ஈரானின் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அந்த தளங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இத்தகைய நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கு பதிலாக, ஐக்கிய அரபு அமீரகம் அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணும் கொள்கையை பின்பற்றி பிராந்திய அமைதி, நிலைத்தன்மை மற்றும் ஒத்துழைப்புக்காக செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த கருத்துகள் மத்திய கிழக்கு பிராந்திய அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

you may also like