Saturday, October 10, 2026

மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை வாக்குப் பதிவுகள்


இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில், நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிந்தது. நாளை செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டார். அவர் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதன்பின், முதல்வர் பதவி ஏற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்தார்.

சி.விஜய பாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 6 அதிமுக எம்எல்ஏக்கள், பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஆளும் த.வெ.கவில் இணைந்தனர். இதையடுத்து, அந்த 7 தொகுதிகளும் வெற்றிடமாகின என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பைக் கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், சுயேச்சை வேட்பாளர்கள் என 28 பேர் களத்தில் உள்ளனர்.

அதேபோல், தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்யபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நா.த.க. சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். த.வெ.க .அரசுக்கு ஆதரவு அளித்து வரும் இரு கொம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியும், தாராபுரம் தொகுதியில் இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

எனவே, இந்த இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சியான த.வெ.க. எதிர்க்கட்சியான தி.மு.க மற்றும் அ.தி.மு.க, நா.த.க, கொம்யூனிஸ்ட் என அனைத்து கட்சிகளும் இரு தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

அதன்படி, நேற்று மாலை 6 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெறும் நாளான 6 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி வரை பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த அரசியல் கட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இரு தொகுதிகளிலும் வெளியாட்கள், கட்சி பணியாளர்கள் மற்றும் வாக்காளர் அல்லாதவர்கள் நேற்று மாலை 6 மணிக்குப் பிறகு தொகுதிகளை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், தங்கும் விடுதிகள், இல்லங்கள் ஆகிய இடங்களில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். வாக்குப் பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் 9 ஆம் திகதி எண்ணப்படுகின்றன.


you may also like