- by Editor
- 2 years ago
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தோல்வி
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தோல்வி அடைந்துள்ளது. பிரேமலதா தலைமையிலான தே.மு.தி.க. மீண்டு வருமா என கேள்விகள் எழுந்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி நடைபெற்றது. இந்த முறை தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டன. நான்கு முனை போட்டியில் தி.மு.க. கூட்டணியானது மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.
இத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர் (தனி), வடசென்னை ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது.
குறிப்பாக திருவள்ளூர், வடசென்னை ஆகிய தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்தனர். இதில் வட சென்னை தொகுதியில் தே.மு.தி.க .வேட்பாளர் பார்த்தசாரதி 72,016 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தை பிடித்தார். விருதுநகரில் மட்டும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் (விஜயகாந்த் மகன்) காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு இறுதி வரை கடுமையான போட்டியாக விளங்கினார்.
குறைந்தளவில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தார். ஒட்டுமொத்தமாக விஜய பிரபாகரன் 3 லட்சத்து 80 ஆயிரத்து 877 வாக்குகள் பெற்று அனைவரின் கவனத்தை பெற்றார்.
அதேநேரம் தொடர்ந்து சரிவில் பயணித்த தே.மு.தி.க. வாக்கு விகிதம் சற்று உயர்ந்துள்ளது. தற்போதைய தேர்தலில் தே.மு.தி.க. தான் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் சேர்த்து 11 லட்சத்து 28 ஆயிரத்து 616 (2.59 வீதம்) வாக்குகளைப் பெற்றுள்ளது. இது சமீபத்திய தேர்தல்களைவிட அதிகமாகும்.
முதன்முதலாக 2005 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. 27.64 லட்சம் வாக்குகளை பெற்றது. கட்சி ஆரம்பித்தவுடன் நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவுக்கு சுமார் 8.4 சதவீத வாக்குகள் கிடைத்தது அனைவருருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. மேலும், விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட அந்த கட்சியின் தலைவரான மறைந்த விஜயகாந்த் வெற்றி பெற்றார்.
அதற்கடுத்த 2009 மக்களவைத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. 31.26 லட்சம் வாக்குகளை பெற்றது. இது பதிவான மொத்த வாக்குகளில் 10.3 சதவீதமாகும். 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் இணைந்து தே.மு.தி.க. போட்டியிட்டது. தே.மு.தி.கவுக்கு 7.9 சதவீத வாக்குகளுடன் 29 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாகவும் அங்கீாரம் பெற்றது.
ஆனால், அங்கிருந்துதான் தே.மு.தி.கவின் வீழ்ச்சி ஆரம்பித்தது. அ.தி.மு.க, தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக கருதப்பட்ட தே.மு.தி.க, அ.தி.மு.க. கூட்டணியில் சென்றதை நடுநிலை வாக்காளர்கள் விரும்பவில்லை. கட்சிக்குள் குடும்பத்தின் ஆதிக்கம் வந்தததை தொடர்ந்து பண்ட்ருடி ராமசந்திரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் தே.மு.தி.கவில் இருந்து வெளியேறினர்.
அதன்பின் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட கட்சியின் வளர்ச்சி தடைப்பட்டது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பா.ஜ.க. கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. அனைத்திலும் தோல்வி அடைந்தது. வாக்கு விகிதம் 5.1 சதவீதமாக குறைந்தது. அதற்கு பிறகும் சரிவு தொடர்ந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் ம.தி.மு.க, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து 104 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதம் 2.41 சதவீதமாக குறைந்தது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் சுமார் 34,000 வாக்குகளுடன் 3 ஆவது இடத்தையே பிடித்தார்.
இதற்கு பிந்தைய 2019 மக்களவைத் தேர்தலில் 2.16 சதவீதமும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 0.43 சதவீதமாகவும் தே.மு.தி.கவின் வாக்கு வங்கி வெகுவாக குறைந்தது. இந்தசூழலில் தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி மரணம் அடைந்தார். அதற்கு சில வாரங்கள் முன்னரே அவரின் மனைவி பிரேமலதா கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர் தோல்விகள், பொருளதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தம் பிரேமலதாவுக்கு இருந்தது. அதற்கேற்ப தற்போதைய மக்களவைத் தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து எதிர்கொள்ள தே.மு.தி.க. முடிவு செய்தது. அது தே.மு.தி.கவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு 2.59 வீத வாக்குகளை பெற்று மீண்டும் அரசியல் களத்தில் தன் இருப்பை தக்க வைத்துள்ளது.