Friday, October 9, 2026

போதைப்பொருள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக தீவிர சோதனை


போதைப்பொருள் பயன்படுத்தி அல்லது மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்கான சோதனைகளை நாடு முழுவதும் தீவிரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பில் நாடு முழுவதும் பணியாற்றும் அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

தினசரி இடம்பெறும் வீதி விபத்துகள் மற்றும் பாரிய விபத்துகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளின் போது, போதைப்பொருள் பயன்பாடு, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், ஆபத்தான மற்றும் கவனயீனமான முறையில் வாகனம் செலுத்துதல் மற்றும் அதிகப்படியான சோர்வு ஆகியவை முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வாகன சாரதிகளுக்கு கூடுதல் கண்காணிப்பு

டிப்பர் வாகனங்கள், லொறிகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பயணிகள் பேருந்துகளின் சாரதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தியதாக அடையாளம் காணப்பட்ட பல பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணொளி ஆதாரங்களுடன் தகவல் வழங்கலாம்

ஏதேனும் பேருந்து சாரதி அதிக வேகத்தில், போட்டியிடும் வகையில், ஒழுக்கமற்ற முறையில் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துவதை பொதுமக்கள் அவதானித்தால், அதுதொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதற்காக 070 47 55 600 என்ற WhatsApp இலக்கத்திற்கு, சம்பந்தப்பட்ட வாகனத்தின் இலக்கத் தகடு தெளிவாகத் தெரியும் வகையிலான காணொளிப் பதிவை அனுப்புமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், எவ்வித தராதரமும் பாராது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.

you may also like