Saturday, October 10, 2026

பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையில் வெடிப்பு – விசாரணைக்கு இரு பொலிஸ் குழுக்கள்


பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சமையலறை வளாகத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இன்று (26) அதிகாலை சுமார் 4 மணியளவில் மருத்துவமனையின் பிரதான சமையலறை வளாகத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்த நிலையில் பொலன்னருவ பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் பிரதான சமையலறையில் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் எரிவாயுக் கசிவின் காரணமாக எரிவாயு உருளை வெடித்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெடிப்பின் தாக்கத்தினால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அருகிலுள்ள பல கட்டிடங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதனிடையே, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மருத்துவமனைக்கு வருகை தர உள்ளார்.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் மருத்துவமனைக்கு சென்று நிலைமையை பார்வையிட்டுள்ளார். சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை பொலன்னருவ பொது மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், வெடிப்புச் சம்பவத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may also like