Thursday, October 8, 2026

பூட்டான் மன்னரைச் சந்தித்தார் பிரதமர் ஹரிணி அமரசூரிய


பூட்டானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, செப்டெம்பர் 2ஆம் திகதி திம்புவிலுள்ள தாஷிச்சோட்சோங்கில் பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கை சந்தித்தார்.

இதன்போது, பூட்டானின் எதிர்கால அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் இலங்கை–பூட்டான் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தக்கூடிய துறைகள் தொடர்பில் இருதரப்பினரும் கலந்துரையாடினர்.

பூட்டானின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் இலங்கையின் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொள்வதில் தமது நாட்டுக்கு ஆர்வம் இருப்பதாக பூட்டான் மன்னர் தெரிவித்தார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் பூட்டானில் முதலீட்டு வலயமொன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், பூட்டான் எதிர்கொண்டுவரும் சனத்தொகை சவால்கள், குறிப்பாக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது அதிகரித்துள்ளமை மற்றும் அதன் காரணமாக எதிர்கால தொழிலாளர் படை மற்றும் சனத்தொகையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பிலும் இருதரப்பினரும் கவனம் செலுத்தினர்.

இரு நாடுகளினதும் நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் வகையில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளின் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவமும் சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது.

you may also like