Sunday, October 11, 2026

பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் படத்தின் இந்திப் பாடல் இடம்பெற்றதால் ஒடிசாவில் சர்ச்சை


இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் 5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த இந்திப் படத்தின் பாடல் தவறுதலாக இடம்பெற்றுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

பாடசாலை பாடப்புத்தகத்தில் சினிமா பாடல் அச்சிடப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஒடிசா மாநிலத்தில் அண்மையில் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரச பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்தப் பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 1999 இல் வெளியான `ஹம் தில் தே சுகே சனம்` என்ற படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. பாடசாலை மாணவர்கள் பயிலும் பாடப் புத்தகத்தில் திரைப்படப் பாடல் அச்சிடப்பட்டது எப்படி என்று கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

‘நிம்புடா நிம்புடா' என்று தொடங்கும் இந்தப் பாடல், பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது. ஏற்கெனவே அச்சிடப்பட்ட தாள்கள், பாடப்புத்தகத்தை தொகுக்கும்போது தவறுதலாக சேர்க்கப்பட்டு விட்டதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் மாநில நாட்டுப்புறப் பாடலான இது மிகவும் பிரபலமான பாடல். இந்த ‘நிம்புடா நிம்புடா' பாடல் பாடப்புத்தகத்தில் அப்படியே அச்சிடப்பட்டுள்ளது. அச்சிடுதல் அல்லது வெளியிடுவதில் ஏற்பட்ட ஒரு பெரிய கவனக்குறைவால் இந்த மிகப்பெரிய பிழை நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதனிடையே ஒடிசா மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (எஸ்.சி.இ.ஆர்.டி) பாடப்புத்தகங்களில் 1,600 இற்கும் மேற்பட்ட பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து இந்தப் புத்தகங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் அதிகபட்சமாக 705 பிழைகள் உள்ளன.

இதையடுத்து பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று ஒடிசா மாநில பாடசாலை மற்றும் மக்கள் கல்வித் துறை அமைச்சர் நித்யானந்த கோண்ட் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.


you may also like