Thursday, October 8, 2026

பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம் நிறைவு: 90 வேட்பாளர்கள் இறுதி, தமிழகத்தில் இழுபறி


பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுவின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் நேற்று நிறைவுபெற்றது. இதில் 7 மாநிலங்களில் போட்டியிடக் கூடிய 90 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பிரஹலாத் ஜோஷி, நித்யானந்த் ராய், எம்.பி.க்கள் சுஷில் மோடி, சி.ஆர். பாட்டீல், தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டி, இமாச்சலப் பிரதேசத்தின் மூத்த தலைவர் ஜெய்ராம் தாக்கூர், கர்நாடகா முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் விஜேந்திரா எடியூரப்பா, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், குஜராத் முதல்வர் பூபேந்திரா பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடாகா, பிஹார், இமாச்சலப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

பிஹார், தமிழ்நாடு, ஒடிசாவில் இன்னும் பா.ஜ.க. கூட்டணி இறுதியாகாத நிலையில் வேட்பாளர்கள் அறிவிப்பு இம்மாநிலங்களில் கொஞ்சம் தாமதமாகும் எனவும் தெரிகிறது. பிஹாரில் லோக் ஜன சக்திக் கட்சி, தமிழ்நாட்டில் அ.தி.மு.க, ஹரியாணாவில் ஜனநாயக் ஜனதா கட்சி, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக சென்று கொண்டிருக்கிறது.

முன்னதாக கடந்த மார்ச் 2 ஆம் திகதியன்று பா.ஜ.க. 195 வேட்பாளர்கள் கொண்ட மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் 34 பேர் மத்திய, மாநில அமைச்சர்கள். இருவர் முன்னாள் முதல்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 மக்களவைத் தேர்தல் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 303 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்றது. இந்நிலையில் இத்தேர்தலில் பா.ஜ.க. 400 இடங்களை குறிவைத்துள்ளது.


you may also like