Wednesday, October 7, 2026

பசிபிக் பெருங்கடலில் கொதிக்கும் வெப்பநிலை - உருவாகிறது 'சூப்பர் எல் நினோ'


தற்போது நிலவும் எல் நினோ காலநிலை, வலுவான "சூப்பர் எல் நினோ" நிலையாக மாறுவதற்கான வாய்ப்பு 81 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்தக் காலநிலை மாற்றம் 2027ஆம் ஆண்டின் ஆரம்ப வசந்த காலம் வரையில் நீடிப்பதற்கான சாத்தியம் 97 சதவீதம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட 1°C முதல் 3°C வரை அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த நூற்றாண்டில் பதிவான மிக வலுவான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றத்தின் தாக்கமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வறட்சி, காட்டுத்தீ மற்றும் விவசாய இழப்புகள் ஏற்படக்கூடும் எனவும், அதேவேளை உலகின் சில பகுதிகளில் அதிகளவான மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எல் நினோவின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், 2026 அல்லது 2027ஆம் ஆண்டுகளில் உலகளாவிய சராசரி வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டக்கூடும் எனவும் வானிலை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் காலநிலை மாற்றம் உலகளாவிய விவசாய சந்தைகள் மற்றும் உணவு உற்பத்தித் துறைகளில் பெரும் சவால்களை ஏற்படுத்தக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) கடந்த ஜூன் மாதம் எல் நினோ நிலை உருவாகியுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், அதன் தீவிரம் எதிர்பார்த்ததை விட வேகமாக அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

you may also like