Friday, October 9, 2026

நெடுந்தீவு சென்ற படகு விபத்து - 10 பேர் பாதுகாப்பாக மீட்பு


 குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பயணித்த படகு ஒன்று அனர்த்தத்திற்குள்ளான நிலையில், அதில் பயணித்த 10 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவிக்கையில், குறித்த படகில் இரு படகோட்டிகள் உட்பட 10 பேர் பயணித்துள்ளனர்.

குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து இன்று பிற்பகல் 3 மணியளவில் நெடுந்தீவை நோக்கிப் புறப்பட்ட படகு, உரிய நேரத்தில் நெடுந்தீவை சென்றடையவில்லை என கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, கடற்படையினரால் உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்பகுதி இன்று மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடற்பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் குறித்த படகில் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

you may also like