Monday, October 12, 2026

நுரைச்சோலையில் ஜனாதிபதி ஆணைக்குழு விசேட சோதனை


2009ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதி மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகள், நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் டி.வி. பந்துலசேன உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் கடந்த 14ஆம் திகதி இந்த கள ஆய்வில் பங்கேற்றனர்.

இதன்போது, நிலக்கரி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதிலிருந்து மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் வரை இடம்பெறும் முழுமையான செயல்முறைகள் நேரடியாக அவதானிக்கப்பட்டன. குறிப்பாக, நிலக்கரி இறக்குதல், சேமிப்பு நடவடிக்கைகள், மாதிரிகள் சேகரித்தல், ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் பிரதான கட்டுப்பாட்டு அறையின் செயற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விரிவாக ஆராய்ந்தனர்.

இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அரசாங்கத்துக்குச் சொந்தமான இலங்கை நிலக்கரி நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய்வதே இந்த ஆணைக்குழுவின் பிரதான நோக்கமாகும்.

இந்த விடயங்களை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like