- by Editor
- 2 months ago
நீர்கொழும்பு கடற்பகுதியில் மீன்பிடிப் படகுகள் விபத்து
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
நீர்கொழும்புக்கு அண்மையிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றன.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான 'பெல் 412' (Bell 412) ரக ஹெலிகொப்டரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (31) பிற்பகல் மீன்பிடிக்கச் சென்ற டிங்கி படகொன்று விபத்துக்குள்ளானமை, அருகில் இருந்த மற்றொரு மீன்பிடிப் படகின் தகவலின் மூலம் முதன்முதலில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, மீன்பிடிக்கச் சென்ற மேலும் மூன்று மீன்பிடிப் படகுகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதும் அவை காணாமல் போயிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த தகவலின்படி, விபத்துக்குள்ளான ஒரு படகில் பயணித்த மீனவர் ஒருவரின் சடலம் நீர்கொழும்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதே படகில் இருந்த மேலும் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன மீனவர்களையும் படகுகளையும் தேடும் பணிக்காக, இலங்கை கடற்படையின் டோரா ரக ரோந்துப் படகு ஒன்றும் விசேட நீர்மூழ்கிக் குழுவினருடன் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வான் மற்றும் கடற்படைப் பிரிவுகள் இணைந்து கடல் மற்றும் வான்வழி தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.