- by Editor
- 1 year ago
நியாயமான பணிச்சூழலுக்கான உறுதி - உழைக்கும் மக்களுக்கு பிரதமரின் மே தினச் செய்தி
-
- by Editor,
- 5 months ago
- in இலங்கை செய்திகள்
உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி, நியாயமான மற்றும் பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில், இலங்கையின் தொழிலாளர் வரலாறு பல தசாப்தங்களாக உரிமைகளுக்காக போராடிய பெருமைமிக்க பயணமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரத்தம், கண்ணீர், வியர்வை ஆகியவற்றின் தியாகத்தால் உருவான இந்தப் போராட்டம், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது என அவர் வலியுறுத்தினார்.
1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து தொழிலாளர் இயக்கம் ஒழுங்கமைந்த சக்தியாக உருவெடுத்ததையும், ஏ.ஈ. குணசிங்க தலைமையில் தொடங்கிய தொழிற்சங்கப் போராட்டங்கள் அரசியல் பலத்தை பெற்றதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
1923ஆம் ஆண்டின் ரயில்வே வேலைநிறுத்தம் மற்றும் 1947ஆம் ஆண்டின் அரச சேவை வேலைநிறுத்தம் போன்ற முக்கிய திருப்புமுனைகள், நாட்டின் முன்னேற்றத்தில் உழைக்கும் மக்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை உறுதிப்படுத்தியதாகவும் கூறினார்.
மேலும், 1886ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் 8 மணி நேர வேலை நேரக் கோரிக்கைக்காக உயிர்த் தியாகம் செய்த தொழிலாளர்களை நினைவுகூர்ந்து, உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களுக்கு மரியாதை செலுத்தி சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் சக்தியால் உருவான அரசாங்கத்தின் கீழ் இம்முறை மே தினம் கொண்டாடப்படுவது சிறப்பானதாகும் எனவும், உழைப்புக்கு உரிய கௌரவத்தை வழங்குவதும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதும் அரசின் அடிப்படை கொள்கைகளாக உள்ளன எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, தற்போதுள்ள சேவைகளை விரிவுபடுத்தி, புதிய வேலைத்திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுடன், அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும் சூழலை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
விசேட தேவையுடையோர் உட்பட அனைத்து பிரஜைகளுக்கும் கண்ணியமான தொழில்சார் வாழ்க்கையை உறுதி செய்வது அரசின் பொறுப்பாகும் என்றும், ஊதியமற்ற உழைப்பை அடையாளம் கண்டு, அதற்கான சமூகப் பாதுகாப்பை வழங்கும் தேசிய கட்டமைப்பை உருவாக்குவது முக்கிய முன்னுரிமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்து வகையான உழைப்பையும் மதிக்கும், உரிமைகள் பாதுகாக்கப்படும், சமத்துவமிக்க ஒரு நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் எனவும், இந்த மே தினத்தில் அதற்கான உறுதியை மீண்டும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இறுதியாக, உழைக்கும் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆற்றலால் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற பொதுவான இலக்கை விரைவில் அடைய நாடு வலிமை பெற வேண்டும் என அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.