- by Editor
- 2 years ago
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஜனவரி 3ஆம் திகதியும் போராட்டம்!
-
- by Editor,
- 9 months ago
- in இலங்கை செய்திகள்
"தையிட்டியில் எமது காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் மீண்டும் புத்தர் சிலை வைக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி போராட்டம் நடைபெறும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்."
- இவ்வாறு திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்தவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்ட அழைப்பை விடுத்தனர்.
அங்கு அவர்கள் தெரிவிக்கையில்,
"தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையானது 18 பேருக்கு சொந்தமான காணி. இந்தப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தபோது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்ட இந்த விகாரைக்கு எதிராக சுமார் 3 வருட காலமாக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
மக்களுடைய காணிகள் மக்களுக்கே வழங்கப்படும் எனக் கூறும் இந்த அநுர அரசாங்கம் இந்தக் காணிகளை விடுவிப்பதில் இரட்டை வேடம் போடுகின்றது. நாங்கள் இந்த ஆட்சியில் மட்டுமல்ல கடந்த அரசுகளின் காலத்திலும் இந்தக் காணி தனியாருடைய காணி என்பதற்கான சகல ஆதாரங்களையும் சமர்ப்பித்து விடுவிக்குமாறு கோரிய நிலையில் தற்போதைய அமைச்சர் சந்திரசேகர் உறுதிகளை ஆராய வேண்டும் எனக் கூறுகின்றார்.
நீங்கள் எங்களின் உறுதிகளை ஆராயாமல் காணி தரவேண்டாம். எங்கள் உறுதிகள் அனைத்தும் 1912ஆம் ஆண்டு முதல் முறையாக இருந்தமைக்கான பதிவுகள் அனைத்தும் எம்மிடமும் திணைக்களங்களிடமும் இருக்கின்றன - ஆராயுங்கள். எதிர்வரும் 3ஆம் திகதி திஸ்ஸ விகாரைக்கு மீண்டும் ஒரு புத்தர் சிலையை கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அன்றைய தினம் போராட்டம் நடைபெறவுள்ளது.
காணிகளை மீட்பதற்கான எமது போராட்டம் சைக்கிள் கட்சியின் போராட்டமல்ல. எமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை கட்டப்பட்டமைக்கு எதிராக அனைத்து கட்சியினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், எம்மோடு இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க அவர்களே முன் வந்தார்கள். நாங்கள் யாரையும் குறை கூறுவதற்காக கூறவில்லை. எமது போராட்டம் எமக்கானதாக மட்டும் நினைத்து விட வேண்டாம்.
இன்று தையிட்டி மக்களின் காணிகளில் எப்படி விகாரை அமைக்கப்பட்டதோ அவ்வாறே நாளை உங்களுடைய காணிகளிலும் விகாரை அமைக்கப்படும். கேட்டால் இது பௌத்த சிங்கள நாடு என்று கூறுவார்கள். தற்போது வவுனியாவில் புதிதாக புத்தர் சிலை முளைக்கின்றது. இதேபோல் உங்கள் வீடுகளின் பின்புறமும் புத்த விகாரைகளை அமைப்பார்கள். நாங்கள் கேள்வி கேட்க முடியாதவர்களாக தொடர்ந்து ஆளாக்கப்படுவோம்.
நயினாதீவு விகாராதிபதி எமது நியாயமான போராட்டத்தை ஆதரித்துள்ள நிலையில் எங்களில் சிலர் கேட்கின்றார்கள் விகாரை கட்டும் வரை எங்கிருந்தீர்கள் என்று. அவர்களிடம் நாம் தெரிவிப்பது ஒன்றே விகாரை கட்டும்போது எமக்குத் தெரியாது. கட்டப்பட்ட விகாரைக்கு எதிராகப் போராடி வரும் நிலையில் மூன்று புதிய கட்டடங்களை விகாரைக்குள் கட்டி விட்டார்கள் தடுக்க முடிந்ததா?" - என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.