Friday, October 9, 2026

துரித பொருளாதார அபிவிருத்தி இவ்வருடத்திற்குள் சாத்தியமாம்: ஜனாதிபதி ரணில் உறுதி


 சரியான தீர்மானங்களுடன் இவ்வருடத்திற்குள் இலங்கையை துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்ல முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

அதற்குத் தேவையான கடினமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன எனவும், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டின் நலன் கருதிய தீர்மானங்களையே தாம் மேற்கொண்டிருக்கிறார் எனவுவும், நாட்டைப் பாதுகாப்பதற்கான பொறுப்புக்களை உணர்ந்து மற்றைய அரசியல்வாதிகளும் புதிய வருடத்தில் ஒன்றுபடுவர் எனத் தாம் எதிர்பார்க்கிறார் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பத்தரமுல்லை – அக்குரேகொடவில் புதிய விமானப் படைத் தலைமையகக் கட்டடத்தை நேற்றுத் திறந்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி -

”நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய போராட்டத்தை எதிர்கொண்டுள்ளோம். நான் ஜனாதிபதியாக நாட்டைப் பொறுப்பேற்ற போது, நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சரிவடைந்திருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு என்னிட்டம் ஒப்படைக்கப்பட்டது.

இங்கு அரசியல் செய்வதா, இல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்காக பணியாற்றுவதா என நேரடியாக அமைச்சரவையுடன் ஆலோசிக்க நேர்ந்தது.

பொருளாதார வேலைத்திட்டத்தை இரு வருடங்கள் காலம் தாழ்த்தியதால் லெபனான் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டது.

அரசியல் ஸ்திரமற்ற நிலைமையினால் கிரேக்கம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள 13 வருடங்கள் திண்டாடியது. அவர்கள், அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீதமாக குறைக்க நேர்ந்தது. இருப்பினும் நாம் அந்த நிலைமைக்குச் செல்லவில்லை. சரிவடைந்து கிடந்த எமது மொத்த தேசிய உற்பத்தி எமது நேரடித் தீர்மானங்களின் பலனாக முன்னேற்றம் கண்டது.

2023 ஆண்டு இறுதியில் ஓரளவு வலுவான பொருளாதார நிலைமை உருவாகியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கான தீர்மானங்களை, சரியான நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். இவ்வருடத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3 வீதமாக அமையும் என நம்புகிறேன். பின்னர் அதனை மிஞ்சிய வளர்ச்சி ஏற்படும் - என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

you may also like