Friday, October 9, 2026

தியத்தலாவை ஓட்டப் பந்தய திடலில் விபத்து: வாகன சாரதிகள் விளக்கமறியலில்


தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகன சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இரண்டு பேரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்போது அவர்கள் இன்று காலை தியத்தலாவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை மற்றும் பேராதனை பகுதிகளைச் சேர்ந்த 36 மற்றும் 47 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் விபத்து தொடர்பில் இராணுவத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தியத்தலாவை - நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் நேற்று இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

இதில் வெலிமடை பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய சிவக்குமார் தனுசிகா என்ற சிறுமியும் அடங்குவதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அத்துடன் குறித்த விபத்தில் சிக்குண்ட 19 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில், 11 பேர் தியத்தலாவை வைத்தியசாலையிலும் 7 பேர் பதுளை பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரேத பரிசோதனையின் பின்னர் அவர்களது சடலங்கள் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் வெலிமடை, சீதுவ, மாத்தறை மற்றும் அக்குரஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் தெரிவித்துள்ளது. 

you may also like