Saturday, October 3, 2026

தலைமறைவோருக்கு அதிர்ச்சி நடவடிக்கை - சொத்துக்களை முடக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம்


நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகும் நபர்களின் சொத்துக்களை முடக்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

1979ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டம் இலக்கம் 15 இன் விதிகளுக்கு அமைய, நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நிறைவேற்றுவதிலிருந்து தப்பியோடும் அல்லது தலைமறைவாகும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பிச் செல்வது உறுதிப்படுத்தப்பட்டால், குறைந்தபட்சம் 30 நாட்களுக்குள் குறிப்பிட்ட இடம் மற்றும் நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமான அறிவிப்பை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60 இன் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.

எனினும், குறித்த அறிவிப்பு வழங்கப்பட்ட பின்னரும் அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 61 இன் கீழ் அவருக்குச் சொந்தமான அசையும் அல்லது அசையா சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளைத் தவிர்த்து தலைமறைவாகும் நபர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் தொடரப்படும் என்பதையும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

you may also like