Thursday, October 8, 2026

தமிழ் மக்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு கடலட்டை வளர்ப்பு வாய்ப்பாக அமைந்துள்ளது - ஈ.பி.டி.பி.


சுயபொருளாதாரத்தின் ஊடாக தமிழ் மக்கள் வலுவடைந்து விடக்கூடாது என்ற சிந்தனைக்கு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தந்திரோபாய வேலைத்திட்டங்கள் சவாலாக அமைந்துள்ளதாக ஈ.பி.டி.பி.யின் வேலணை பிரதேச ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி.யின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வேலணை பிரதேச சபையின் செயற்பாடுகள், கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பிரதேச மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, புகையிலைச் செய்கை கட்டுப்படுத்தப்படும் பட்சத்தில் அதனை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் எதிர்கால நிலைமை, பிரதேச சபைக்கு உட்பட்ட குளங்களின் அபிவிருத்தி, குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடுகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

மேலும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் மற்றும் வேலணை பிரதேசத்தில் கடலட்டை பண்ணைகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கடலட்டை வளர்ப்பால் பொருளாதார வாய்ப்புகள் அதிகரிப்பு

டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் கடலட்டை பண்ணைகளை விரிவுபடுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, அல்லைப்பிட்டி பகுதி மக்கள் கணிசமான பொருளாதார நன்மைகளைப் பெற்று வருவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இளைஞர்கள் சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, கடலட்டை வளர்ப்பு உள்ளிட்ட கடற்றொழில் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருவதன் மூலம் அவர்களுக்கான வருமான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

தமிழ் மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேறக்கூடாது என்ற சிந்தனைக்கு கடலட்டை பண்ணைகளின் வளர்ச்சியும், அதன் மூலம் உருவாகியுள்ள பொருளாதார வாய்ப்புகளும் சவாலாக அமைந்துள்ளதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

மக்கள் பிரச்சினைகளை அடையாளம் காண வேண்டும் - டக்ளஸ்

கூட்டத்தில் கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, வேலணை பிரதேசத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் காணப்படும் மக்கள் பிரச்சினைகளை வட்டாரப் பிரதிநிதிகள் முறையாக அடையாளம் காண வேண்டும் என வலியுறுத்தினார்.

அவ்வாறு அடையாளம் காணப்படும் பிரச்சினைகளை பிரதேச சபை உறுப்பினர்களின் ஊடாக உரிய மட்டத்திற்குக் கொண்டு சென்று தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதுடன், மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவதற்கும் வட்டாரப் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

you may also like