Saturday, October 10, 2026

தமிழரசின் பெருந்தலைவர் சம்பந்தனின் இறுதி நிகழ்வில் அண்ணாமலை பங்கேற்பு


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி நிகழ்வு நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ள நிலையில், அந்த நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவுள்ளார்.

இந்தத் தகவலை அண்ணாமலையே தங்களிடம் தொலைபேசி மூலம் உறுதி செய்துள்ளார் என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

அதேவேளை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளபோதும், அது தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

பெருந்தலைவர் சம்பந்தனின் புகழுடல் நேற்று யாழ்ப்பாணத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அன்னாரின் புகழுடல் நேற்றுக் காலை கொழும்பில் இருந்து விசேட விமானம் மூலம் பலாலி விமான நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது. அதன் பின்னர் யாழ். மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் முற்பகல் 10.15 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதன்போது சம்பந்தனின் புகழுடலுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு கௌரவம் செலுத்தப்பட்டதோடு தலைமைக் காரியாலத்தில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

அதன் பின்னர் அன்னாரின் புகழுடல் யாழ். நகர் பகுதியூடாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

சம்பந்தனின் புகழுடல் இன்று காலை யாழ். பலாலி விமான நிலையத்தில் இருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. 

you may also like