Wednesday, October 7, 2026

டெங்கு மரண எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு


இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, இதுவரை நாட்டில் மொத்தம் 100,871 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் மரண விகிதம் 0.077 சதவீதமாக பதிவாகியுள்ளது.

மொத்த நோயாளர்களில் 52.45 சதவீதமானோர், அதாவது 52,906 பேர், மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கம்பஹாவில் அதிக நோயாளர்கள்

மாவட்ட ரீதியான தரவுகளின்படி, அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 21,377 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 19,759 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,689 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,400 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6,305 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை மாதத்தில் அதிக பாதிப்பு

மாதாந்த தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் இதுவரையான சில நாட்களில் 151 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். செப்டம்பர் மாதத்தில் 5,230 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதுவரை இந்த வருடத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் 29,964 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் ஆபத்துப் பகுதிகளாக அடையாளம்

தற்போது நாட்டில் 37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அழித்து, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

you may also like