Sunday, October 4, 2026

டாடா மோட்டார்ஸின் கார் விற்பனை 69% உயர்வு


இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், 2026 ஜூன் மாதத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் கார் விற்பனையில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், மொத்த வாகன விற்பனை 69 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேவேளை, பயணிகள் வாகனங்களின் விற்பனை மட்டும் 67 சதவீதம் அதிகரித்துள்ளது.

2025 ஜூன் மாதத்தில் 37,083 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்திருந்த டாடா மோட்டார்ஸ், 2026 ஜூன் மாதத்தில் அந்த எண்ணிக்கையை 62,076 ஆக உயர்த்தியுள்ளது.

மின்சார வாகன (EV) பிரிவிலும் நிறுவனம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5,228 மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 14,800 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

வெளிநாட்டு ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 154 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதே காலப்பகுதியில் 1,007 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) டாடா மோட்டார்ஸ் 1,82,574 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலாண்டில் விற்பனையான 1,24,809 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 46 சதவீத வளர்ச்சியாகும்.

இதற்கிடையில், டாடா மோட்டார்ஸ் அண்மையில் தனது புதிய சியாரா மாடல் மின்சார காரை அறிமுகப்படுத்தியதுடன், இதுவரை மொத்தம் ஏழு மின்சார கார் மாடல்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

you may also like