- by Editor
- 8 months ago
ஞானசார தேரருக்கு ஆதரவாக கண்டியிலிருந்து பிக்குகள் தலைமையில் பாதயாத்திரை
கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் மகா சங்கத்தினரின் தலைமையில் முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை இன்று (10) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து ஆரம்பமானது.
பாதயாத்திரை ஆரம்பமாவதற்கு முன்னதாக, கண்டி மகுல் மடுவ பகுதியில் விசேட ஆசீர்வாத நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த உலப்பனே சுமங்கல தேரர், தற்போதைய அரசாங்கம் ஞானசார தேரருக்கு எதிராகத் தன்னிச்சையான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியதுடன், அதற்கு தனது கடுமையான எதிர்ப்பையும் வெளியிட்டார்.
கடந்த காலத்தில் வாரியப்பொல ஸ்ரீ சுமங்கல தேரர் நாட்டினதும் சம்புத்த சாசனத்தினதும் பாதுகாப்புக்காகக் குரல் கொடுத்ததைப் போன்று, ஞானசார தேரரும் நாடு, தேசம் மற்றும் சாசனத்தின் வளர்ச்சிக்காகக் குரல் எழுப்பியதாக உலப்பனே சுமங்கல தேரர் சுட்டிக்காட்டினார்.
ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டது அவரது தனிப்பட்ட விடயம் அல்ல எனத் தெரிவித்த அவர், தேரர் சிறைத்தண்டனை அனுபவிப்பது முழு தேசத்தினதும் பௌத்த சாசனத்தினதும் நலன்களுடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்டார்.
எனவே, அவரைத் தனிமைப்படுத்தாமல், எவ்வித நிபந்தனைகளுமின்றி அவருக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலும், வாரியப்பொல ஸ்ரீ சுமங்கல தேரரின் சிலைக்கு அருகிலும் ஆரம்பமான இந்தப் பாதயாத்திரை, ஞானசார தேரர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி முன்னெடுக்கப்படவுள்ளது.
ஞானசார தேரருக்கு விடுதலை கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் கைவிடப்படாது எனத் தெரிவித்த உலப்பனே சுமங்கல தேரர், நிலவும் அடக்குமுறைகளுக்கு எதிராக வன்முறையற்ற முறையில் முன்னெடுக்கப்படும் இந்தப் பாதயாத்திரையில் பொதுமக்களும் இணைந்துகொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.