- by Editor
- 2 years ago
சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வார அவகாசம்
சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இன்று (30) நிறைவடைந்ததாக இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அதிகாரிகளும் இணையவழி மூலமாகவே தங்களது விபரக் கூற்றுகளைப் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரை விபரங்களைச் சமர்ப்பிக்காத அதிகாரிகள் இன்று வரை அதனைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. காலக்கெடுவுக்குப் பின்னரும் விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
எனினும், இறுதி நாளில் அதிகளவிலானோர் ஒரே நேரத்தில் இணையவழி மூலம் விபரங்களைப் பதிவேற்ற முயன்றதால், ஆணைக்குழுவின் இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, இன்று காலக்கெடுவுக்குள் விபரங்களைச் சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு ஒரு வார சலுகைக் காலம் வழங்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜூலை 7ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை தங்களது சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுகளை இணையவழியாகச் சமர்ப்பிக்க முடியும் என இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.