Friday, October 9, 2026

செம்மணி மனிதப் புதைகுழி - கழுத்துப் பகுதியில் நாணயக்குற்றி போன்ற பொருள் கண்டுபிடிப்பு


யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட மனித என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து நாணயக்குற்றி வடிவிலான பொருள் ஒன்று கண்டறியப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதுவரை முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித என்புத்தொகுதிகளின் எண்ணிக்கை 262 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 13ஆம் நாள் நடவடிக்கைகள் நேற்று இடம்பெற்ற நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்தார்.

அவரின் கூற்றுப்படி, நேற்று புதிதாக ஒரு மனித என்புத்தொகுதி முழுமையாக அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், மேலும் மூன்று என்புத்தொகுதிகளின் சுவடுகள் கண்டறியப்பட்டுள்ளன. எனினும், அவை இன்னும் சுத்தப்படுத்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக இலக்கமிடப்படவில்லை.

அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியில் கண்டறியப்பட்ட நாணயக்குற்றி போன்ற பொருள், 97ஆவது சான்றுப் பொருளாக பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த என்புத்தொகுதியின் தலைப்பகுதியில் முழுமையான தேங்காய் சிரட்டை ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழி அமைந்துள்ள பகுதி மயான எல்லைக்குள் இருப்பதால், அது அப்பகுதியில் இருந்த தென்னை மரத்தின் அடிப்பகுதியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஆரம்பகட்ட சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து மொத்தம் 263 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 262 என்புத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ருகுணு பல்கலைக்கழகம் தொல்லியல் துறையைச் சேர்ந்த பத்து மாணவர்கள் நேற்று முதல் அகழ்வுப் பணிகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு முக்கிய முன்னேற்றமாக, செம்மணி மனிதப் புதைகுழி கண்டறியப்பட்டுள்ள சித்துப்பாத்தி இந்து மயான எரிதகன மேடையின் அத்திவாரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மழையுடனான காலநிலை மற்றும் அப்பகுதியின் சதுப்பு நிலத் தன்மை காரணமாக அத்திவாரத்திற்கு போதிய பிடிமானம் இல்லாததால் இந்த இடிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் ஆரம்ப கட்டத்தில், இந்த அத்திவாரத்தின் கீழ் மனித என்புத்தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்த போதிலும், அது ஏற்கனவே பாதுகாப்பான முறையில் மணலிட்டு மூடப்பட்டுள்ளதாகவும், மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடரும் போது அதுகுறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் எனவும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

you may also like