Saturday, October 10, 2026

செம்மணி குறித்து 16 பரிந்துரைகளை மனித உரிமை ஆணையம் முன்வைப்பு


யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழி தளத்தில் நடைபெற்று வரும் விசாரணை குறித்த விரிவான அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்த அறிக்கையில், புதைகுழி அகழ்வின் முன்னேற்றம் மற்றும் குறிப்பிடத்தக்க சவால்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

நீதி அமைச்சர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, உயர்கல்வி அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோருக்குப் புதைகுழி அகழ்வு தொடர்பில் 16 பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஓகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட உண்மையைக் கண்டறியும் பணியில், புதைகுழி தளம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவத் துறை மற்றும் காணாமல்போனோர் அலுவலகம், நீதிவான்கள், தடயவியல் நிபுணர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் சந்திப்புகள் இடம்பெற்றன.

அறிக்கையிடும் காலப் பகுதியில், 200 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. முதற்கட்ட கண்டுபிடிப்புகள் 90 வீதத்துக்கும் மேற்பட்ட உடலங்கள் ஆடைகள் இல்லாமல் ஆழமற்ற குழிகளில் புதைக்கப்பட்டுள்ளன. சாத்தியமான - நீதிக்குப் புறம்பான கொலைகளைக் குறிக்கும் வகையில் புதைக்கப்பட்டிருந்தன என்பதைக் காட்டுகின்றன என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதைகுழி அகழும் விடயத்தில் நிபுணத்துவம், நிதி மற்றும் தொழில்நுட்பத்தில் உள்ள இடைவெளிகளை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

வழக்கமான பொலிஸாரின் தொடர்ச்சியான ஈடுபாடு முடிவைப் பாதிக்கக்கூடும் என்று அது எச்சரித்துள்ளது.

கடுமையான குற்றங்களை விசாரிப்பதற்கு ஒரு சுயாதீன அலுவலகத்தை நிறுவுதல், மரபணுப் பகுப்பாய்வு மற்றும் காலத்தைக் கணிக்கும் கார்பன் டேட்டிங் ஆகியவற்றுக்கான வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பெறுதல் மற்றும் காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு தேசிய மரபணு வங்கியை உருவாக்குதல் ஆகியவற்றை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

சாட்சிகள் மற்றும் ஊடகங்களை அச்சுறுத்துவதைத் தவிர்க்குமாறு பொலிஸாரயும், விசாரணையில் தலையிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை இராணுவத்தையும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

சில நிறுவன நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியை உறுதி செய்வதற்காக முறையான இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

போதுமான தடயவியல், மானுடவியல் மற்றும் தொல்பொருள் நிபுணர்கள் இல்லாதமை, மேம்பட்ட கார்பன் டேட்டிங் முறைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் மற்றும் மரபணு பகுப்பாய்வில் உள்ள சவால்கள் உள்ளிட்ட நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் முக்கிய இடைவெளிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.

நிதியுதவியில் தாமதங்கள் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் ஏற்படும் மிரட்டல்கள், பொறுப்புக்கூறல் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலைகளை எழுப்பியுள்ளது.


you may also like