- by Editor
- 3 months ago
செம்மணி என்புக்கூட்டுப் புதைகுழி -ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக்குழு கள விஜயம்
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் என்புக்கூட்டுப் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு எதிர்வரும் புதன்கிழமை (22) விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத் தூதர் கார்மென் மொரேனோ தலைமையிலான இந்தத் தூதுக்குழுவில், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
செம்மணி என்புக்கூட்டுப் புதைகுழி தொடர்பான வழக்கு அண்மையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த தூதுக்குழுவின் பார்வை தொடர்பாக நீதிமன்ற அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, தூதுக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) வடக்கு மாகாணத்திற்குச் செல்லவுள்ளது.
செம்மணியில் நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகளில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, புதைகுழியிலிருந்து 437 மனித என்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 428 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகழ்வுப் பணிகளின் போது ஆபரணங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட பல பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதுடன், அவை தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில், தொல்பொருள் ஆய்வாளர்கள், நீதி மருத்துவ நிபுணர்கள் மற்றும் சட்டத்துறை அதிகாரிகளின் பங்களிப்புடன் அகழ்வுப் பணிகள் கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1998ஆம் ஆண்டு பாடசாலை மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து செம்மணி புதைகுழி விவகாரம் முதன்முறையாக கவனத்துக்கு வந்தது. அதேவேளை, இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் மயானம் ஒன்றிற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தோண்டுதல் பணிகளின் போது மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து தற்போதைய அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதேவேளை, காணாமல் போனோர் அலுவலகத்தின் தகவலின்படி, இதுவரை பதிவாகியுள்ள 22,000 காணாமற்போனோர் முறைப்பாடுகளில் 6,000-க்கும் அதிகமானவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவையாகும்.