- by Editor
- 2 years ago
செப்டம்பர் இறுதிக்குள் சூதாட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகள்
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் வசந்த நவரத்ன பண்டார, சூதாட்டத் துறையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை செப்டம்பர் மாத இறுதியிலிருந்து ஆரம்பிக்க முடியும் என நிதிக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (14) நடைபெற்ற நிதிக் குழுக் கூட்டத்திற்கு சூதாட்ட ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தபோது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆணையத் தலைவரின் கருத்துக்கு பதிலளித்த நிதிக் குழுத் தலைவர் டாக்டர் ஹர்ஷா டி சில்வா, ஒழுங்குமுறை நடவடிக்கைகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என தொடர்ந்து கூறப்பட்டு வருவதைக் கேட்டு தாம் சோர்வடைந்துள்ளதாக தெரிவித்தார்.
சூதாட்ட ஒழுங்குமுறைக்கான வரைவு விதிமுறைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஆய்வு செய்வதற்காக சட்ட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வசந்த நவரத்ன பண்டார கூறினார்.
"சட்ட நிபுணர் குழுவின் பரிசீலனைக்குப் பின்னர், இந்த வரைவு விதிமுறைகள் சட்ட வரைவுத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்" என அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த டாக்டர் ஹர்ஷா டி சில்வா, "2022ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனக் கேட்டு வருகிறோம். இதனால் நான் சோர்வடைந்துவிட்டேன். சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் ஏற்படும் தாமதம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்" என்றார்.
மேலும், "கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது பந்திலிருந்தே சூதாட்டம் ஆரம்பமாகிறது. சிறுவர்களும் இதற்கு அடிமையாகி வருகின்றனர்" என அவர் எச்சரித்தார்.
இதற்கிடையில், கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் பிரதி அமைச்சரும் நிதிக் குழு உறுப்பினருமான சதுரங்க அபேசிங்க, சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம் இதுவரை தெளிவான செயல்முறை ஒன்றின் அடிப்படையில் செயல்படுவதாகத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.