Friday, October 9, 2026

சென்னை ஆளுநர் மாளிகைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை!


தமிழக ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால், ஆளுநர் மாளிகைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சென்னை தெற்கு மேலதிக பொலிஸ் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பொலிஸ் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா மேலும் தெரிவிக்கையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ராஜ்பவன் நுழைவு வாயில் பகுதியை குறிவைத்து, பெட்ரோல் நிரப்பிய போத்தலை வீசுவதற்கு முயற்சித்தார். அப்போது அங்கு முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அந்த நபரை பார்த்துவிட்டதால், அவர் எதிர் திசையில் உள்ள ஹைவே ரிஸர்ச் சென்டர் என்ற பகுதியில் இருந்து அந்த போத்தலை வீச முயற்சித்தார். அப்போது பிரதான நுழைவு வாயில் பகுதியிலும், வெளியிலும் இருந்த பொலிஸார் அந்த நபரை சுற்றி வளைத்தனர்.

அந்த நபரை போலீசார் பிடித்தபோது, ஒரு போத்தலை வீசினார். அதிலிருந்து எந்தவிதமான தீயும் வரவில்லை. அவரை பிடித்தபோது, மேலும் 4 போத்தல்கள் அவரிடம் இருந்தன. அதனை பொலிஸார் பறிமுதல் செய்துவிட்டனர். இதனால் ஆளுநர் மாளிகையில் யாரும் பாதிக்கப்படவில்லை. எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.

அந்த நபரை பிடித்து பொலிஸார் விசாரித்தபோது, அவர், 42 வயதுடைய கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இதே மாதிரி, ஒரு அரசியல் கட்சி அலுவலகத்தின் மீது, இதேபோன்ற போத்தலை வீசியுள்ளார். அதற்கு முன்னதாக, தேனாம்பேட்டை பொலிஸ் நிலையத்தில் இதே போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.

அண்மையில் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்திருக்கிறார். அவர் மது அருந்தியுள்ளார். சம்பவத்தின்போது அவர் நிதானத்தில் இல்லை. பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசாரணைக்குப் பின்னர், முழு விவரம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். 

you may also like